தருமபுரி மாவட்ட பாஜக சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். மண்டல தலைவர் கணபதி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ‘தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் இந்துக்களுக்கு எதிராகவும், இந்துமத வழிபாட்டு முறைகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்துக்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் பெரியார் பல்கலைக் கழக வினாத் தாளில் சாதி தொடர்பான வினா இடம்பெற்றுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலரும் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வெங்கட்ராஜ், முருகன், பிரவீன், மாவட்ட பொருளாளர் சிவகுமார், பட்டியல் அணி மாநில செயலாளர் சாட்சாதிபதி, மாவட்ட துணைத் தலைவர்கள் சிவசக்தி, ஐவண்ணன், முரளி, ஷோபன், கிருத்திகா, ராஜேந்திரன், சிவன், நகர தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.