
உக்ரைனில் சிக்கி தவித்த இந்தியர்களில் முதல்கட்டமாக 219 பேர் ருமேனியாவில் இருந்து இந்திய விமானம் கிளம்பியுள்ளது.
உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்த போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் உக்ரைனை ஒட்டிய பல்வேறு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால், இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றும் வழிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிற நாடுகளின் எல்லை வரை இந்தியர்களை பத்திரமாகக் கொண்டு செல்வதில் புதிதாக பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
ஆகையால் அங்குள்ள இந்தியர்களை குறிப்பாக மாணவர்களை உக்ரைனுக்கு அருகில் உள்ள அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னரே நடைப் பயணமாகவும், கார் மூலமாகவும் அண்டை நாடுகளில் சில இந்தியர்கள் தஞ்சமடைந்தனர். அந்த வகையில் தஞ்சமடைந்தோர் முதல்கட்டமாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
இந்தநிலையில் ருமேனியாவில் இருந்து 219 இந்தியர்களுடன் முதல் இந்திய விமானம் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றி இந்தியா அழைத்து வரும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நடவடிக்கையை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்.
219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ருமேனியில் இருந்து கிளம்பிய விமானம் இன்று இரவுக்குள் மும்பை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.