செய்திகள்தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவரே காரணம் என உளவுத்துறை முடிவுக்கு வந்தது எப்படி? – அண்ணாமலை கேள்வி

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவர்கள் காரணம் என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்தது எப்படி என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுதியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவர்கள் காரணம் என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்தது எப்படி என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மவுனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களது இயலாமையை ஒரு சமுதாயத்தினரின் தலையில் இறக்கி வைத்துள்ளனர்.

தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி தமிழக காவல்துறையினரின் செயல்பாட்டையும் உளவுத்துறையின் இயலாமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது?

இதில் சில கட்சிகள் சமூக நீதியை பின்னுக்குத் தள்ளி, அரசுக்கு அளித்த ரகசியத் தகவலை ஊடகத்திற்குக் கசிய விட்டதை முதன்மை குற்றச்சாட்டாக வைத்துள்ளனர். தமிழக உளவுத்துறையின் செயல்பாடு அனைவரும் அறிந்ததே!

மேடையில் முற்போக்குத்தனமாகப் பேசுவதும் நிஜ வாழ்வில் பிற்போக்குத்தனமாக இருப்பதும் திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. திமுக ஆட்சியில் கலவரங்களும் புதிதல்ல இப்படி கலவரங்கள் முடிந்த பின் அதற்குப் பட்டியலின மக்களை வஞ்சிப்பதும் புதிதல்ல.மீண்டும் ஒரு முறை ஒரு திறனற்ற அரசின் எடுத்துக்காட்டாக திமுக அரசு விளங்கியுள்ளது.” இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button