Site icon ழகரம்

“நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை கொடுங்கள்” – பில்கிஸ் பானு உருக்கம்

“இந்த அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், எனது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பற்றி யாரும் யோசிக்கவில்லை” என்று பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார்.

2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்றவர்களை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலை விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு விடுதலை தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

வழக்கறிஞர் மூலமாக அறிக்கை வெளியிட்டிருக்கும் பில்கிஸ் பானு, “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் என்னை உலுக்கியது. எனது குடும்பத்தையும் என் வாழ்க்கையையும் சீரழித்து, என்னிடமிருந்து எனது 3 வயது மகளை பறித்த 11 குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட விடுதலை செய்யப்பட்டனர் என்று கேள்விப்பட்டேன். அதுமுதல் நான் இன்னும் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன்.

இன்று நான் இதை மட்டுமே சொல்ல முடியும்… ஒரு பெண்ணுக்கான நீதி இப்படி தான் முடிவடைய வேண்டுமா?. நான் நமது மண்ணின் உச்சபட்சமாக உள்ள நீதிமன்றங்களை நம்பினேன். நமது சிஸ்டத்தை நம்பினேன். அதேநேரம், மெதுவாக எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியுடன் வாழ கற்றுக்கொண்டேன். ஆனால், 11 குற்றவாளிகளின் விடுதலை என்னிடமிருந்து அமைதியைப் பறித்தது மட்டுமில்லாமல், நீதியின் மீதான எனது நம்பிக்கையையும் அசைத்துவிட்டது.

என்னிடம் உள்ள சோகங்களும், நான் வைத்திருந்த நம்பிக்கையும் எனக்காக மட்டுமல்ல, நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்கானது. இந்த அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், எனது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பற்றி யாரும் யோசிக்கவில்லை. குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுப்பது இதுதான். தயவுசெய்து விடுதலை உத்தரவை திரும்ப பெறுங்கள். அச்சமின்றி, நிம்மதியாக வாழ்வதற்கான எனக்கான உரிமையை, சுதந்திரத்தை திரும்பக் கொடுங்கள். நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Exit mobile version