Site icon ழகரம்

அரசை கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டு சதி: ஆதரவாளர்கள் பேரணியில் இம்ரான் கான் பேச்சு

தனது தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டு சதி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் தொடர்ந்து சிக்கலைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வந்தனர். அவருக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த ஒரு வருடமாகவே போராட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடந்தி வந்தனர். சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது ஆதரவாளர்கள் சூழ பிரமாண்ட பேரணி ஒன்றை இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை இஸ்லமாபாத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பேரணியில் இம்ரான் கான் பேசும்போது, “எனது தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் வெளிநாட்டு சதி உள்ளது. எனது அரசு கவிழ்ப்பதற்கான இவர்களின் முயற்சிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. என்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளது. என்னவாயினும் நாங்கள் நாட்டின் நலனில் எந்த சமரசம் செய்து கொள்ளமாட்டோம்” என்று பேசினார்.

இந்த நிலையில், இம்ரான் கான் அரசு மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ளது.

சொந்த கட்சியிலே எதிர்ப்பு: இம்ரான் கானுக்கு சொந்த கட்சி எம்.பி.க்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜா ரியாஸ், நுார் ஆலம் கான் உள்ளிட்ட 22 எம்.பி.க்கள் பிரதமர் இம்ரான் கான் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக புகார் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால், இம்ரான் கானின் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் 24 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக இன்று வாக்களித்தால் பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது.

Exit mobile version