செய்திகள்தமிழ்நாடு

ஒபிஎஸ்-ஸிடம் 2 மணி நேரம் விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் 2 மணி நேரம் விசாரணை முடிவடைந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை ஆணையத்தின் முன் இருவரும் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

2 மணி நேரம் விசாரணை: இன்று காலை 11.30 மணிக்கு விசாரணை ஆணையத்தின் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் இரண்டு மணி விசாரணை நடைபெற்றது. அப்போது ஆணையத்தின் சார்பில், ’மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியுமா?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ’மறைந்த ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருந்ததை தவிர அவருக்கு இருந்த வேறு உடல் உபாதைகள் பற்றி தெரியாது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது. அந்தசமயம் நான் எனது சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவு நேரத்தில் எனது உதவியாளர் மூலமாகவே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை தெரிந்துகொண்டேன். அடுத்தநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த அப்போதைய தலைமைச் செயலாளரிடம் விவரங்களை முழுமையாக கேட்டறிந்தேன்’ என்றார்.

’விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? விசாரணை ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார்?’ என்று ஆணையத்தின் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ’பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதல்வர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக, மெட்ரோ ரயில் தொடக்கவிழா நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை பார்த்தேன். அதன்பிறகு நான் அவரை பார்க்கவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்துகொண்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் நடத்திய காவிரி கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. காவிரிக் கூட்டம் குறித்து அறிக்கை வந்தபின்னரே அதுகுறித்து தெரிந்துகொண்டேன். காவிரி கூட்டத்தில் ஜெயலலிதா தனக்கு டிக்டேட் செய்ததா அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவ் கூறினார்.

இந்த காவிரி கூட்டத்திற்குப் பின்னர் ஜெயலலிதாவிற்கு இதய பிரச்சினை ஏற்பட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு வாரத்திற்குக முன்பே அவரது இதய பிரச்சினை குறித்து விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார். இதய பாதிப்பு ஏற்பட்டபோது என்ன சிகிச்சை அளிக்கப்ப்டடது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என்று விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணை ஆணையம், உணவு இடைவெளிக்குப் பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button