
ஆந்திராவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜாவும் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ம் ஆண்டில் முதல்வராக பதவி பொறுப்பேற்ற பின்னர், அப்போது ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், வெறும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இந்த அமைச்சர்கள் பதவி வகிப்பர் என்றும், அதன் பின்னர் புதியவர்களுக்கு மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நெருங்குவதால், புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் தீர்மானித்தார்.
அதன்படி, அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதில், கவுதம் ரெட்டி சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் 24 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகனிடம் சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து 25 அமைச்சர்கள் கொண்ட பட்டியல் ஆளுநருக்கு நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டது. பழைய அமைச்சர்கள் பட்டியலில் இருந்து 10 பேரும், புதிதாக 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
அமராவதியில் உள்ள தலைமைச் செயலகம் அருகேயுள்ள மைதானத்தில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஸ்வா பூஷன் அரிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ஆர்.கே. ரோஜா புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் முதன்முறை ஆந்திர அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். ரோஜா அமைச்சரானதை நகரி தொகுதியில் உள்ள அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ரோஜா தவிர குடிவாடா அமர்நாத், புடி முட்யாலா நாயுடு, தாடிசெட்டி ராஜா, ராஜண்ணா டோரா பீடிகா, தர்மான பிரசாத் ராவ், ஜோகி ரமேஷ், அம்பத்தி ராம்பாபு, மெருகு நாகார்ஜுனா, விடடாலா ரஜினி, கொட்டு சத்யநாராயணா, குருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ், காகனி கோவர்த்தன ரெட்டி மற்றும் உஷா ஸ்ரீ சரண் ஆகிய 13 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.
பழைய அமைச்சர்களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராம சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ஜெயராம், அம்பாட்டி ராம்பாபு, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பல ராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா ஆகியோ ருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை போலவே 5 பேருகு்கு துணை முதல்வர் பொறுப்பும் வழங்கப்படும் எனத் தெரிகிறது. காப்பு, பட்டியலினத்தவர், பழங்குடியினர், முஸ்லிம் சமூகங்களுக்கு துணை முதல்வர் வாய்ப்ப வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே புதிய அமைச்சரவையில் திருப்பதி உட்பட 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.