Site icon ழகரம்

தருமபுரியில் 3 நாட்கள் அன்புமணி பிரச்சார நடைபயணம்

ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட பாசனத்துக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் நாளை (19-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட பாமக செயலாளர்கள் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ(மேற்கு), செந்தில் (கிழக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரியாறு ஓடுகிறது. வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது.

இருப்பினும், தருமபுரி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட விவசாயத்தை மேம்படுத்தவும் ஒகேனக்கல் உபரி நீரை நீரேற்றும் திட்டம் மூலம் தருமபுரி மாவட்ட நீர்நிலைகளில் நிறைத்து பாசனத்துக்கு வழங்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நாளை (19-ம் தேதி) பாமக தலைவர் அன்புமணி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பிரச்சார நடைபயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து 3 நாட்களுக்கு மாவட்டத்தின் முக்கிய கிராமங்கள் வழியாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒகேனக்கல், பென்னாகரம், நல்லாம்பட்டி, பி.அக்ரஹாரம், நாகதாசம்பட்டி, சோமேனஅள்ளி, இண்டூர், அதகபாடி, சோலைக்கொட்டாய், நடுப்பட்டி, ஒடசல்பட்டி கூட்டுரோடு, கடத்தூர், சில்லாரஅள்ளி, ஜாலியூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி நான்கு ரோடு, கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், கோபாலபுரம், மெனசி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ஆகிய இடங்களில் இத்திட்டம் குறித்து அவர் பேசுகிறார்.

மாவட்ட முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்நிகழ்வு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். எனவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களும் இந்த நடைபயணத்தில் பங்கேற்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Exit mobile version