“மழலையர் வகுப்புகளை மூடினால், அது ஏழை மக்கள் கூட தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கே வழிவகுக்கும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அத்துடன், இந்தப் பிரச்சினையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உண்மை நிலையை மறைப்பதாகவும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், அவை அரசு பள்ளிகளில் இருந்து அங்கன்வாடிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்திருக்கிறார். அமைச்சரின் இந்த விளக்கம் உண்மை நிலையை மறைக்கும் செயல்; இது யாரையும் திருப்திப்படுத்தாது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் கடந்த 2019-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசால், தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 2381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட மழலையர் வகுப்புகளில் 52,000-க்கும் கூடுதலான குழந்தைகள் படித்து வந்தனர். 2022-23ம் கல்வியாண்டு வரும் 13-ம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாகவும், அதற்காக நியமிக்கப்பட்டிருந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் ஏற்கெனவே பணியாற்றி வந்த பள்ளிகளுக்கே அனுப்பப்படுவதாகவும் தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
மழலையர் வகுப்புகள் நிறுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த நான், அந்த வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். இது தொடர்பாக தஞ்சையில் நேற்று விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, “மழலையர் வகுப்புகள் மூடப்படவில்லை. இதுவரை தொடக்கக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த அந்த வகுப்புகள் இனி சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும். மழலையர் வகுப்புகளில் பிள்ளைகளை சேர்க்க விரும்புபவர்கள் இனி அங்கன்வாடிகளில் சேர்க்கலாம்” என்று கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த மழலையர் வகுப்புகள் இனி அங்கன்வாடிகளில் நடத்தபடும் என்ற அறிவிப்வை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு பள்ளிகளுக்கு பதிலாக அங்கன்வாடிகளில் மழலையர் பள்ளிகளை நடத்துவது என்பது பெயர்ப் பலகையை மாற்றி வைப்பது போன்ற எளிதான செயல் அல்ல. அதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்; ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பன தான் மழலையர் வகுப்புகளை வெற்றிகரமாக நடத்துவதற்காக அடிப்படைத் தேவைகள் ஆகும். அங்கன்வாடிகளில் அவை கிடையாது.
அதிமுக ஆட்சியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்ட போது, மழலையர் வகுப்புகளுக்காக நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அந்த ஆசிரியர்களால் மழலையர்களை கையாள முடியாது; மழலையர் வகுப்புகளை திறம்பட நடத்துவதற்காக மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்வதற்கு பதிலாக அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை மூடி விட்டு, அதில் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவரையும் அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய இடங்களுக்கு அரசு மாற்றியுள்ளது.
அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்பது உண்மையை மறைக்கும் செயல் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அங்கன்வாடி மையங்களின் பணி முறைசார்ந்த கல்வி வழங்குவது அல்ல. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல், உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தல், இறப்பு, நோய், ஊட்டச்சத்துக் குறைவு உள்ளிட்ட நிகழ்வுகளை குறைத்தல், குழந்தைகளை கவனிக்கும் தாய்மார்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவை தான் அங்கன்வாடிகளின் பணி ஆகும்.
இவற்றுக்கான பயிற்சி மட்டுமே அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியையையே செம்மையாக செய்ய முடியாத அளவுக்கு அவர்களுக்கு பணிச்சுமை உள்ளது. இத்தகைய சூழலில் அவர்களால் எவ்வாறு மழலையர் வகுப்புகளை நடத்த முடியும்? அமைச்சரின் அறிவிப்புப்படி அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் என்ற பெயர்ப் பலகைகளை வேண்டுமானால் மாட்டலாமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
குழந்தைகளின் கற்றல் திறன் 3 வயதில் சிறப்பாக இருக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் அந்தப் பருவத்தில் அவர்களுக்கு முறைச்சார்ந்த கல்வி வழங்குவது அவசியம் ஆகும். அதற்காக அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டியது கட்டாயம்.
இதை உணராமல் மழலையர் வகுப்புகளை மூடினால், அது ஏழை மக்கள் கூட தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கே வழிவகுக்கும். இது கல்வி வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் எந்த வகையிலும் பயனளிக்காது. எனவே, தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளைத் தொடரவும், அதற்காக மாண்டிசோரி ஆசிரியர்களை போதிய அளவில் நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.