புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசியச் சின்னத்துக்கு அவமதிப்பு என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ள நிலையில், அதற்கு தேசியச் சின்னத்தை உருவாக்கிய சிற்பி சுனில் தியோர் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் தேசியச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது. இதை நேற்று முன்தினம்பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்தப் புதிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக திரிணமூல்காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஜவஹர் சிர்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேசியச் சின்னத்தில் உண்மையான சிங்கங்கள் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன. நாடாளுமன்ற கட்டிடத்தில்வைக்கப்பட்டுள்ள மோடியினுடைய சிங்கங்கள், உறுமிக்கொண்டு தேவையில்லாத ஆக்ரோஷத்துடன் சரியான அளவில்இல்லாமலும் இருக்கின்றன. அதனை உடனே மாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து சிற்பத்தை உருவாக்கிய சிற்பி சுனில் தியோர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “இது சாரநாத்தில் உள்ள தேசியச் சின்னத்தின் மாதிரி வடிவம்தான். புதிய சிற்பத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் சிற்பத்தின் கீழே இருந்து எடுக்கப்பட்டவை. எனவே, அதனால்வெளிப்பாடுகள் ஆக்ரோஷமாகவும், வாய் பெரிதாகவும் தோன்றுகிறது” என்றார்.