“மின் கட்டண உயர்கவைக் கண்டித்து தமிழக பாஜக போராட்டம் நடத்த வேண்டுமென்றால், கர்நாடகா அல்லது, குஜராத்தில்தான் நடத்த வேண்டும்” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை புளியந்தோப்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: “பொதுமக்கள் அடித்தட்டு மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் ரூ.1130 வரை கட்ட வேண்டிய சூழலில் இருந்து, 501 யூனிட் பயன்படுத்தினால் கூட ரூ.656 கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. இதனால் இரண்டு மின் இணைப்புகள் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. இதையெல்லாம் மாற்றி ஒரே கட்டமாக கொண்டுவரப்பட்டு, அதற்கான கட்டண விகிதங்களில்தான் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதே தவிர, கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீரழிவு காரணமாகவும், மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவின் தமிழக தலைவர் கூறியிருக்கும் கருத்துகளை, சமூக வலைதளத்திலும், ஊடகங்களிலும் பார்த்தேன். தமிழக பாஜக போராட்டம் நடத்த வேண்டுமென்றால், ஒன்று கர்நாடகாவில் நடத்த வேண்டும், அல்லது குஜராத்தில் நடத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்ணயித்திருக்கிற கட்டணம் எவ்வளவு, 100 யூனிட் வரை கர்நாடகாவில் வசூலிக்கின்ற கட்டணம் எவ்வளவு, குஜராத்தில் வசூலிக்கின்ற கட்டணம் எவ்வளவு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் மிக குறைவான அளவில் மின்கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வேண்டுமென்றால், தமிழக பாஜக கேஸ் சிலிண்டர் விலையுயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தட்டும். பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து போராட்டம் நடத்தட்டும்.
உண்மையாகவே மக்கள் மீது அக்கறை உள்ள கட்சியாகவோ, மக்களுக்கு நன்மை செய்கிற ஒரு கட்சியாக இருந்திருந்தால், இந்த விலை உயர்வுகளை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தட்டும். 2014-ல் 410 ரூபாயாக இருந்த கேஸ் சிலிண்டர் விலை இன்று 1120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியம், சொந்தமாக புதிய மின் உற்பத்தி திட்டம் எதையும் முன்னெடுக்கவில்லை.
2006 – 2011 வரை எடுத்துக்கொள்ளப்பட்ட திட்டங்களை முடிக்காததால், ஏற்பட்ட வட்டி சதவீதம் 12,600 கோடி ஏற்பட்டுள்ளது. இது யாரால் ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது என்பது குறித்தெல்லாம் சிந்திக்காமல்,அந்த கட்சி இருக்கிறது, அதை மக்களிடம் காட்ட வேண்டும், தாங்களும் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேசுகின்றனர்” என்று அவர் கூறினார்.