பாண்டியர் வரலாற்றின் சான்றுகள்…!!

கி.பி முதலாம் நூற்றாண்டு காலத்திலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் தொடர்ந்து பாண்டிய மரபினரின் ஆட்சியை நீட்டித்த வரலாற்றை எழுதவற்கான சான்றுகள் பலவகைப்பட்டனவாகும்.
1.சங்ககாலப் பாண்டியர் (கி.பி முதல் மூன்று நூற்றாண்டுகள்).
2.முதல் பாண்டியப் பேரரசு கடுங்கோன் வழிவந்த பாண்டியர் (கி.பி 550 முதல் 950 வரை).
3.இரண்டாம் பாண்டியப் பேரரசு (கி.பி 1190 முதல் 1310 வரை).
4.பிற்காலப் பாண்டியர் (கி.பி 1310-க்குப் பிறகு 17 ஆம் நூற்றாண்டு வரை).
இலக்கியச் சான்றுகள்: சங்ககாலப் பாண்டியர்ப் பற்றிய வரலாற்றுக்குச் சங்க இலக்கியங்களே முதன்மை ஆதாரங்கள். நற்றிணை, புறநானூறு, பரிப்பாடல் போன்ற தொகைநூல்களும். திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி போன்ற பத்துப்பாட்டுப் பாடல்களும். எடுத்துக்காட்டாக மாங்குடி மருதனார் தம்முடைய மதுரைக் காஞ்சியில் “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றிய பல அரிய விவரங்களைத் தந்துள்ளார். மேலும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, வடிம்பலம்ப நின்ற பாண்டியன் போன்ற அரசர்களைப் பற்றிய விவரங்களும் மதுரைக் காஞ்சியில் கிடைக்கின்றன.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, வெற்றிவேல் செழியன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன், பாண்டியன் நல்வழுதி, வெள்ளியம்பலத்துத் துஞ்சியப் பெருவழுதி, பூதப்பாண்டியன் போன்ற அரசர்களைப் பற்றிய குறிப்புகள் புறநானூறுப் பாடல்களில் கிடைக்கின்றன.
பாண்டியன் முடத்திருமாறன், அறிவுடை நம்பி போன்றோரைப் பற்றிய குறிப்புகள் நற்றிணையில் கிடைக்கின்றன. ஆரியப்படை கடந்தப் பாண்டிய நெடுஞ்செழியனைப் பற்றியும், அவனது தலைநகரமான மதுரையைப் பற்றியும், அவன் காலத்தில் ஆட்சிப்புரிந்த மற்ற அரசர்களைப் பற்றியும் சிலப்பத்திகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெடுஞ்செழியன் காலத்தில் தான் சேரன் செங்குட்டுவனும், கயவாகும் வாழ்ந்தனர் என்று சிலப்பதிகாரம் உரைக்கிறது. பரிப்பாடலில் இளம்ப்பெருவழுதிப் பற்றிய வரலாறு காணப்படுகிறது.
பாண்டிய நாட்டு இயற்கைவளம், துறைமுகங்கள், வர்த்தகம், மதுரையின் சிறப்பு முதலியவற்றின் குறிப்புகள் மதுரைக்காஞ்சி, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலான நூல்களில் விரித்துரைக்கப்பட்டுள்ளது.
அயல்நாட்டவர் குறிப்புகள்: கிரேக்க மெகஸ்தனிஸ் எழுதிய “இண்டிகா” நூலிலும் அதன்பின் தோன்றிய கிரேக்க உரோமானிய நூல்களிலும் பாண்டியர் பற்றித் தெளிவான விவரங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தின் பேரூர்கள், துறைமுகப்பட்டினங்கள் பற்றி பண்டையக் கிரேக்க உரோமானிய ஆசிரியர்களான பிலினி, தாலமி ஆகியோரின் குறிப்புகளும், “செங்கடல் விவரத் தொகுதி” நூலும் பாண்டிய நாட்டின் வரலாற்றுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளன. சங்க இலக்கியங்களும் மேல்குறிப்பிட்ட நூல்களின் குறிப்புகளும் பாண்டியர் பற்றியும், தலைநகர் மதுரை, துறைமுகம் கொற்கை, பண்பாட்டுத்தளம் குமரி பற்றியும், உரோமானியர்களுடன் நடைப்பெற்ற வாணிப்பத்தைப் பற்றியும் மிகத் தெளிவாக விவரிக்கிறது.
கி.பி 12,13 நூற்றாண்டுகளில் அரசன் ஸ்ரீமாறன் காலத்தில் பாண்டியருக்கும், இலங்கை மன்னனுக்கும் நடைப்பெற்ற போர்களை “மகாவம்சம்” எடுத்துரைக்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் சீனப்பயணி யுவான்சுவாங் பல்லவத் தலைநகரான காஞ்சிக்கு வந்து பல குறிப்புகளை எழுதியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் பாண்டிய நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதை அறிந்து பாண்டியநாடு செல்லாமல் பஞ்சம் பற்றிய குறிப்புகள் எழுதியுள்ளர்.
பாண்டியரைப் பற்றிய பிற்காலப் பயணிகளின் குறிப்புகளில் மிகவும் முதன்மை வாய்ந்ததாக கருதப்படுவது மார்கோபோலோவின் குறிப்புகள் ஆகும். வெனீஸ் நாட்டைச் சேர்ந்த இவர் சீனத்திலிருந்து பாரசீகம் போகின்ற வழியில் கி.பி 1292-93 ஆண்டுகளில் தமிழகம் வந்து குறிப்புகளை எடுத்துள்ளார் அதில் 5 பாண்டிய அரசர்களின் ஆட்சிப் பற்றியும் வளம், வாணிபம், மக்களின் வாழ்வியல் பற்றிய செய்திகளும் நமக்கு கிடைக்கிறன.பாண்டிய நாட்டில் முத்துக் குளிக்கும் தொழில் விவரங்களையும், அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள் பற்றியும் அவரது நூலில் கிடைக்கிறது.
வரலாற்றாசிரியர் வாசாப் பாண்டிய நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைப் பற்றியும், மாறவர்மன் குலசேகரனைப் பற்றியும், சடையவர்மன் சுந்தரப் பாண்டியன் பற்றியும் எழுதியுள்ளா. பாண்டிய அரசு உள்நாட்டுக் குழப்பத்தைப் பற்றியும், தில்லி சுல்தான் அலாவுதீன் தளபதி மாலிக்காபூர் பாண்டியநாடுவரை படையெடுத்த விவரங்களைப் பற்றியும் உள்ள வாசாப்’ன் குறிப்புகள் மிக முதன்மையானவை.
14 ஆம் நூற்றாண்டில் முகமதிய ஊடுருவல்களைப் பற்றிய விவரங்கள் அமீர்குஸ்ரு, இபின் பதூதா போன்ற நூலாசிரியர்களின் குறிப்புகள் மூலம் தெளிவாகின்றன. சுல்தான் ஆட்சியில் இருந்து மதுரையை விடுவிக்க போசாள மன்னன் மூன்றாம் வல்லாளனின் பெருமுயற்சிகளைப் பற்றியும் இபின் பதூதா விவரமான குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.
பிற்கால இலக்கியங்கள்: தேவார திவ்யப் பரபந்தப் பாடல்கள் முதல் பாண்டியப் பேரரசு ஆட்சிகாலத்தில் தோன்றியதற்கான சான்றுகள் பொருந்துகின்றன. பாண்டிய நாட்டிலுள்ள பல சைவ, வைணவத் தளங்களின் சிறப்பு, மக்களின் இறைவழிபாடு இவற்றைப் படம்பிடித்துக் காட்டுகிறது. திருமாலிருஞ்சோலை மலைக்குக் கோநெடுமாறன் செய்வித்த பெரும்தொண்டினைப் பெரியாழ்வார் போற்றிப்புகழ்ந்துள்ளார். பாண்டியன் அவைக்களத்தில் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர் வரகுணனின் சமயநெறிப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பாண்டியரை வென்று பல்லவர் கண்ட வெற்றியை திருமங்கை ஆழ்வார் பாடல்களில் காணலாம்.
பாண்டியநாடு களப்பிரரின் ஆதிக்கத்தில் கண்ட கொடுமைகளைப் பற்றி மூர்த்திநாயனார் புராணத்தில் இடம்பெற்றுள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் பெருமாள்ஜீயர் என்பரால் இயற்றப்பட்ட வைணவ குருபரம்பரையில் வைணவத்தளங்கள், ஆழ்வார் ஆச்சாரியார் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. பெரியாழ்வார் பாண்டிய அரசன் ஸ்ரீவல்லவனால் போற்றப்பட்டது. மதுரகவி ஆழ்வார் பாண்டிய அவைக்களத்தில் அமைச்சரானப் பிறகு நம்மாழ்வாரின் சீடரானது தெரியவருகிறது. சமயநூல்களில் அச் சமயம் பற்றிய செய்திகள் மட்டுமன்றி மேலும் பல உண்மைகள் பொதிந்து கிடப்பது தெளிவாகிறது.
இறையனார் அகப்பொருள் செய்யுள்களிலிருந்து “பாண்டிய கோவை” எனும் நூலில் நெடுமாறனைப் பற்றி புகழ்ந்துப் பேசப்படுகிறது. பாழி, செந்நிலம், விழிஞம், ஆற்றுக்குடி, பூலந்தை, சேவூர், நெல்வேலி முதலிய இடங்களில் பாண்டியர் கண்ட வெற்றிகள் தெரியவருகிறது.
புராண நூல்கள் அவ்வளவாக வரலாற்றுக்குப் பயன்தரக் கூடியவையாக இல்லை. பெரும்பற்றபுலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் மதுரைப்பற்றிய புராண கதை நூலாகும். மாடக்குளக்கீழ் மதுரை கல்வெட்டுகளில் வரும்பெயர் இந்நூலில் வருகிறது. நெடுஞ்சடையப் பராந்தகனின் அமைச்சர் தோற்றுவித்த நரசிங்கப் பெருமாளின் குகைக்கோயில் அமைந்துள்ளது, மலையில் சமணர் வாழ்ந்த படுக்கைகள் காணப்படுகிறது இது திருவிளையாடல் புராணக்கதைகளில் இடம்பெற்றுள்ளது.
“மதுரைத்தல வரலாறு” என்ற நூல் மதுரைக் கோயிலின் வரலாற்றைக் கூறுகிறது. 14 ஆம் நூற்றாண்டு நிகழ்வுகளை முகமதியர் ஆட்சி இன்னல்களை, விஜயநகர இளரவசன் கம்பணராயன் மதுரையைக் கைப்பற்றியதையும் கல்வெட்டுப்பாணியில் வரிசைப்படுத்தி நமக்கு அளிக்கிறது.
“மதுரைத் திருப்பணி மாலை” என்ற பிற்கால நூல் கோவிலின் திருப்பணியை குறிப்பிடுகிறது, “கப்பலூர்க் கோவை” பாண்டியநாட்டுக் கப்பலூரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியருக்குப் படைத்தளபதியாக விளங்கிய கருமாணிக்கன் காலிங்கரையன் மேல் பாடப்பட்ட கோவை நூலாகும். மாறவர்மன் பராக்கிரமப் பாண்டியனின் ஏழாம் ஆண்டாகிய கி.பி 1341 பாண்டி மண்டலத்து முத்தூர்க் கூற்றத்து உலகளந்த சோழ நல்லூரான கப்பலூருடையான் யாதவராயன் காலிங்கராயனை கருமாணிக்கத் தேவன், மாரிங்கூர்க் கோயிலுக்கு கட்டளை அமைத்த செய்தியை ஒரு கல்வெட்டு அறிவிக்கிறது. இத் தலைவனே கப்பலூர்க் கோவையின் தலைவனாவான்.
பாண்டிய நாட்டைப்பற்றி சமஸ்கிருத நூலான கௌடில்யரின் “அர்த்த சாஸ்திரத்தில் காணப்படுகிறது. மகாகவி காளிதாசர் இயற்றிய ரகுவம்சம் நூலில் இந்துமதியின் சுயம்வரத்தில் கலந்துக் கொண்ட பாண்டிய அரசனைப் புகழ்ந்துப் பாடியுள்ளார். ஹெய்சாள அரசவையில் இருந்த வித்திச் சக்கரவர்த்தி என்னும் சமஸ்கிருதப் புலவர் பாண்டியர் முதலிய தென்னகத்து அரசர்களின் ஆதரவையும் பெற்றிருந்தார். அவர் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியர்களுக்கும் ஹெய்சாள அரசன் இரண்டாம் நரசிம்மனுக்கும் நடந்தப் போரைப் பற்றிய பல வரலாற்று உண்மைகளைக் “கத்ய கர்ணாம்ருதம்” என்னும் சமஸ்கிருத நூலில் எழுதியுள்ளார். சோழரது வீழ்ச்சியைப் பற்றியும், காடவன் கோப்பெருஞ்சிங்கனின் எதிர்ப்புக்களைப் பற்றியும் பலசெய்திகளை இந்நூல் அளித்துள்ளது.
14 ஆம் நூற்றாண்டுப் பாண்டிய நாட்டு அரசியல் நிலைகளையும், முகமதியர் ஆதிக்கத்தை அகற்றி விஜயநகர இளவரசன் கம்பணராயன் நாட்டைக் கைப்பற்றியது பற்றியும் ஆதாரங்களுடன் அவனது மனைவி கங்காதேவி எழுதிய “மதுரா விஜயம்” அல்லது “கம்பணராய விஜயம்” கூறுகின்றது. இந்நூல் அக்கால கல்வெட்டுச் சான்றுகளுடன் பொருந்தியுள்ளன. தெலுங்கு நூல்களான “பிரபன்னுமிருதம்”, “சாலுவாப்யுதயம்” போன்ற நூல்களில் பிற்காலப் பாண்டியர் பற்றிய சில குறிப்புகள் கிடைக்கின்றன.
சங்க கால, பிற்கால இலங்கியங்கள், அயல்நாட்டவர் குறிப்புகள், சமய நூல்களில் காணப்படும் செய்திகளைப் பார்த்தோம். அடுத்து இனி கல்வெட்டு, செப்பேடுகளில் கிடைத்த #பாண்டியர்_வரலாறு தொடரும்…