கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிப்பது அந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், மலையங்களில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் ஆடை உற்பத்தி ஆகும்.
உலகளாவிய கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் பாதிப்படைந்தது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவையும் சந்திக்கத் துவங்கியது. தொடர்ந்து இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தப்ய ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன.
டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 320 என்றளவில் உள்ளது. அதனால் எல்லா பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. அரசுக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெட்ரோல், டீசல், கேஸ் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்ததால் கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்ச் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
பேப்பருக்கு தட்டுப்பாடு; தேர்வு ஒத்திவைப்பு: இலங்கையில் பேப்பருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்கு பள்ளிகளில் நடைபெறவிருந்த இறுதி பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதில்லை. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கடனால் சிக்கித் தவிக்கும் இலங்கை சர்வதேச நிதியத்திடமிருந்து 22 மில்லியன் பெயில் அவுட் கோரியுள்ளது.
ஒவ்வொரு நாடும் தனது வரவுக்கு மீறி செலவு செய்யும் போது மிகப் பெரிய பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுவாக அரசுகள் போரில் ஈடுபடும் போது இந்த நிலை ஏற்படும். மக்கள் நலப் பணிகளை வரவுக்கு மீறி அதிக அளவு செய்தாலும் இதுபோல் பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையின் அளவு நாட்டின் உற்பத்தியை விட மிக அதிகமாக சென்றால் அந்த நாட்டினால் கடனைத் திருப்பித் தர முடியுமா என்ற சந்தேகம் வருவதால், ரிஸ்க் அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி கடனுக்கான வட்டி வீதம் மிக அதிகமாகும். இதன் விளைவாக புதிய கடனை வாங்கும்போதும், பழைய கடனை புதுப்பிக்கும் போதும் நிதி பிரச்சனை ஏற்பட்டு பெயில் அவுட் தேடி நாடுகள் செல்லக்கூடும். அப்படியான நிலைமைதான் இலங்கைக்கும் நேர்ந்துள்ளது.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், படகு மூலம் மீண்டும் அகதிகளாக தமிழகத்தின் ராமேஸ்வரம் நோக்கி வருவதாக அறிவித்துள்ளது.