Site icon ழகரம்

‘காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளுமே பிரிவினை அரசியல்தான் செய்கின்றன’ – கொட்டித் தீர்த்த குலாம் நபி ஆசாத்

 “காங்கிரஸாக இருக்கட்டும், இல்லை வேறு கட்சிகளாக இருக்கட்டும்… எல்லா கட்சிகளுமே பிரிவினை அரசியல்தான் செய்கின்றன. ஒருநாள் எனது ஓய்வுச் செய்தியை நீங்கள் கேட்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், “காங்கிரஸாக இருக்கட்டும் இல்லை, வேறு கட்சிகளாக இருக்கட்டும்… எல்லா கட்சிகளுமே பிரிவினை அரசியல்தான் செய்கின்றன. ஒருநாள் எனது ஓய்வு செய்தியை நீங்கள் கேட்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த வேளையில் சமூகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர சிவில் சமூகத்தால் தான் முடியும். சாதி, மதம், கிராமம், நகரம், இந்து, முஸ்லிம், சியா, சன்னி, தலித், தலித் அல்லாதவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என இன்னும் பிற விஷயங்களால் மக்களைப் பிரிக்கும் வேலையை அரசியல் கட்சிகள் 24 மணி நேரமும் செய்கின்றன. இது எனது கட்சியும் விதி விலக்கல்ல. நான் யாரையும் மன்னிப்பதாக இல்லை. இந்த கொடுமைகளுக்கு எதிராக சாமானிய பொதுச் சமூகம் தான் திரண்டெழ வேண்டும்.

இந்தியாவில் அரசியல் அசிங்கமாகிவிட்டது. சில சமயங்களில் நாமெல்லாம் மனிதர்கள்தானா என்ற சந்தேகம் வருகின்றது. மத ரீதியான பிரிவினை நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துள்ளது. எல்லோரையும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் எனப் பிரித்தோம் என்றால் யாரை மனிதரென்று அடையாளம் காட்டுவோம்.

ஒரு மனிதரின் சராசரி வாழ்நாள் காலம் 80 முதல் 85 ஆக இருக்கிறது. இந்தியர்கள் பணி ஓய்வுக்குப் பிந்தைய 20 முதல் 25 ஆண்டுகளை தேசத்தைக் கட்டமைப்பதில் செலவிட வேண்டும்.

நான் என் வாழ்க்கையை காந்தியவாதியாகத் தான் ஆரம்பித்தேன். அப்புறம்தான் அமைச்சரானேன். இன்றும் நான் காந்தியை பின்பற்றுகிறேன். என் பார்வையில் அவர் ஒரு சிறந்த இந்து மட்டுமல்ல, மதச்சார்பின்மையின் பெரிய அடையாளமும் கூட. கடவுளை வணங்குபவர்கள் மதச்சார்பற்றவர்களாக இருக்கக் கூடாது என்பதில்லை. மதத்தை உண்மையாக நேர்மையாக பின்பற்றுபவர்கள் எல்லோருமே மதச்சார்பற்றவர்கள் தான். தங்களின் மதத்தைப் பற்றி ஆழமான அறிவில்லாதவர்கள் தான் சமூகத்தின் ஆபத்து” என்று பேசியுள்ளார்.

குலாம் நபி ஆசாத்தின் இந்தப் பேச்சு கவனம் ஈர்த்துள்ளது. காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குழுவான ஜி 23 குழுவில் குலாம் நபி ஆசாத் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். அண்மையில் அவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்தார். இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்காக சூசக தகவலைத் தெரிவித்துள்ளதோடு தான் சார்ந்த காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Exit mobile version