மக்களவை இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, மாநில தலைவர் பதவியை தவிர அனைத்து கட்சி பதவிகளையும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று கலைத்தார்.
உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மற்றும் அசம்கர் மக்களவை தொகுதிகள், சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக இருந்து வந்தன. சமீபத்தில் இங்கு நடந்த இடைத்தேர்தலில், இந்த இரண்டு தொகுதிகளையும் சமாஜ்வாதி கட்சி பா.ஜ.க.விடம் இழந்தது. இது அகிலேஷ் யாதவுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது.
இந்நிலையில் மாநில தலைவர் பதவியை தவிர, இதர தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து கட்சி பதவிகளும் உடனடியாக கலைக்கப்படுவதாக அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் நேற்று அறிவித்தார்.
இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், பா.ஜ.க., வை எதிர்கொள்ள சமாஜ்வாதி கட்சியை பலப்படுத்தும் நட வடிக்கையில் முழுவீச்சில் இறங்கி யுள்ளோம்’’ என்றார்.