“அதிமுக எந்த வகையிலுமே எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்பதுதான் பொதுவான மக்கள் கருத்தாக உள்ளது. அதனால், நான் தலைமைக்கு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வி.கே.சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “அதிமுகவில் தற்போது இருப்பவர்களை மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுடன் ஒப்பிட முடியாது. ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு தலைவரை கட்சித் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். அவர் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக இருந்தால்தான் அந்த தலைமையின் கீழ் அனைவரும் கட்டுப்பட்டு இருப்பார்கள். அதிமுகவில் தற்போது அதுபோன்ற நிலை இல்லை.
எனது சுற்றுபயணத்தின்போது கட்சித் தொண்டர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் பார்க்கிறேன், அப்போது குறைகள் அனைத்தையும் கூறுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டது. ஆனால், அவர்கள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். அவர்களிடம் விரைவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என்று கூறினேன்.
நான் அதிமுகவில் இணைவது தொண்டர்களின் கையில்தான் உள்ளது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் வெற்றி பெறும்.
அதிமுக பொதுக்குழு விரைவில் கூடவுள்ளது. அக்கூட்டத்தில் இப்போதைய பொறுப்பாளர்கள் என்ன செய்தாலும், ஒரு கருத்துக்கு அவர்களால் வரமுடியாது, காரணம் தொண்டர்கள் அவர்களுடன் இல்லை. அதிமுகவில் எனக்கு எதிராக அனைவரும் பேசவில்லை, ஒருசிலர் பேசுகின்றனர். அவர்கள் ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என்பதற்காககூட பேசலாம் இல்லையா?
இந்த இயக்கத்தை ஆரம்பித்த நிறுவனர் தலைவர் எம்ஜிஆர், இந்த இயக்கத்துக்கு யார் தலைமை வகிக்க வேண்டும் என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்படி பார்க்கும்போது, தொண்டர்கள்தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதிமுக எந்த வகையிலுமே எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்பதுதான் பொதுவான மக்கள் கருத்தாக உள்ளது. அதனால், நான் தலைமைக்கு வரவேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று கூறினார்.