நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 164 மாநகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 638 நகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 1206 பேரூராட்சி வார்டுகளை அதிமுக இந்த தேர்தலில் வென்றுள்ளது.
பொதுவாக ஆளும் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்றாலும் எதிர்க்கட்சிகள் இவ்வளவு மோசமான தோல்வியை தழுவியது இல்லை.
கோவை, சேலம் போன்ற வலுவாக இருக்கும் மாவட்டங்களிலும் அதிமுக மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலில் அதிமுக சுத்தமாக காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோவில் பல இடங்களில் அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மொத்தம் 9 வார்டுகளில் பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னையில் 134வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் வெற்றிபெற்று இருக்கிறார்.
இந்திய அரசியலை எடுத்துக்கொண்டால் பொதுவாக மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக வளரும். அதன்பின் மாநில கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு பாஜக இரண்டாவது பெரிய கட்சியாகும். பீகாரில் நிதிஷ் குமார், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவிற்கு இதுதான் நிகழ்ந்தது. தெலுங்கானாவில் இதே நிலை கேசிஆருக்கு ஏற்படும் முன் அவர் சுதாரித்துக்கொண்டார். தற்போது அதே அரசியல் மாற்றம் பாஜக மூலம் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியின் வாக்குகளை பாஜக கைப்பற்ற தொடங்கி உள்ளது.