Site icon ழகரம்

அதிமுக அலுவலக சீலை அகற்றக் கோரி இபிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை

ஒற்றைத் தலைமை பிரச்சினையால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.

இந்த சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில் இருவரும்அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சொந்தம் கொண்டாடியுள்ளனர்.

இதற்கிடையில், பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, தங்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் முறையீடு செய்தார்.

தலைமை நீதிபதி ஒப்புதல்

அதையடுத்து நீதிபதி, அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்துள்ள வழக்கு என்பதால், இதுதொடர்பாக தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற்று, உரிய நடைமுறைகளை முடித்து, வழக்கமான முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார். இதற்கிடையில், இந்த வழக்குகள் இன்று (ஜூலை 14) நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட உள்ளன.

Exit mobile version