“அதிமுக முன்னோடிகள் மீது வழக்கு தொடுத்து அழித்துவிடலாம் என்ற கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டால், இதற்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை எங்கள் பக்கம் வழங்க இருக்கிறார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குப் போட்டுவிட்டு, இன்று முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை அசிங்கப்படுத்த வேண்டும், கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், அவர்களது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை யாராலும் அமிழ்த்திட முடியாத ஒரு பந்து. தண்ணீரில் பந்தை அமிழ்த்த முடியுமா, மேலேதான் வரும். அதேபோல் எவ்வளவு வேகமாக அடித்தாலும் அது மேலே மேலேதான் எழும்புமே தவிர, எத்தனை அடக்குமுறை வந்தாலும், ஜனநாயக அமைப்பான நீதிமன்றம் இருக்கிறது.
ஜனநாயக கடமையை ஆற்ற தடையாக இருந்த ஒரு ரவுடியை பிடித்துக் கொடுத்ததற்காக என் மீது 25 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு கொடுங்கோன்மையான ஒரு அரசு தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. அதிமுக கட்சி முன்னோடிகள் மீது வழக்கு தொடுத்து அழித்துவிடலாம் என்ற கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டால், அது பூனை பகல் கனவு கண்டதுபோல் ஆகும்.
இதற்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை எங்கள் பக்கம் வழங்க இருக்கிறார்கள். வருமான வரித் துறையாக இருந்தாலும் சரி, லஞ்ச ஒழிப்புத் துறையாக இருந்தாலும் சரி நீதிமன்றம் என ஒன்று உள்ளது. நீதிமன்றத்தில் அதற்கான நீதி நிலைநாட்டப்படும்” என்று அவர் கூறினார்.