அரசியல்தமிழ்நாடு

25 ஆண்டாக இழப்பீட்டு தொகை தராமல் இழுத்தடிப்பு ; நெல்லை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எல்.ஸ்ரீனிவாசனுக்கு சொந்தமான அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்த நிலம் அரசு நலத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடு வழங்க 1997-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இழப்பீடு வழங்கப்படாததால் ஸ்ரீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் 2012-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 10.10.2018-ல் விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, ஸ்ரீனிவாசனுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் அதன் பிறகும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஸ்ரீனிவாசனின் மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.ஆறுமுகம், வி.ஜார்ஜ்ராஜா ஆகியோர் ஆஜராகி, நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்றனர்.

அரசு வழக்கறிஞர் உறுதியளித்து 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் பிறகும் இழப்பீடு வழங்காதது துரதிர்ஷ்டவசமானது. மனுதாரருக்கு ரூ.6,13,489 இழப்பீடு மற்றும் வட்டி வழங்க வேண்டும். இப்பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய 20.1.2022 வரை அவகாசம் வழங்கப்படுகிறது.

அதற்குள் இழப்பீட்டுத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்யாவிட்டால் நெல்லை மாவட்ட ஆட்சியரின் அலுவலக கார் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்கள் ஜப்தி செய்யப்படும். இதற்காக அம்பாசமுத்திரம் சார்பு நீதிமன்றத்துக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குமாறு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button