மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான மசோதாவை பாஜக எம்.பி.ரவி கிஷண் தனிநபர் மசோதாவாக மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
அண்மையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பாரதி பிரவீண் பவார் பேசும் போது, “நாட்டில் பெருகி வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை’’ என்றார்.
இந்நிலையில் மக்கள் தொகைகட்டுப்பாட்டு மசோதாவை, தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்ய உள்ளதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்.பி.ரவி கிஷண் தெரிவித்தார். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் அவர் பேசியதாவது: நாட்டில் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை கொண்டு வந்து நாட்டில் அமல்படுத்தும் போது உலகுக்கே வழிகாட்டும் குருவாக (விஷ்வ குரு) இந்தியா மாறும்.
எனவே இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். மேலும் இந்த மசோதாவின் சிறப்பம்சங்கள் குறித்து எம்.பி.க்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். இந்த மசோதா மீது விவாதம் நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வாறு ரவி கிஷண் கூறினார்.
அண்மையில் ஐ.நா. வெளியிட்டிருந்த அறிக்கையில், வெகுவிரைவில் சீனாவின் மக்கள்தொகையை, இந்தியாவின் மக்கள் தொகை கடந்துவிடும் என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.