“97% மதிப்பெண் பெற்றிருந்தாலும், என் மகனால் மாநிலத்தில் மருத்துவ சீட் பெற முடியவில்லை. மருத்துவ சீட் பெற, கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க வேண்டும்” என்று உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தை பேசியுள்ளார்.
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று பேசினார். இந்திய மாணவர்கள் ஏன் அதிகளவில் உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்று விவாதத்தின் தொடர்ச்சியாக அமைச்சர் இந்தக் கருத்தை பேசியிருந்தார். இந்நிலையில், உக்ரைனில் கொல்லப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடா அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேசிய ஞானகவுடா, “நவீன் ஒரு அறிவார்ந்த மாணவர். அவன் இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல், தான் உக்ரைனுக்குச் சென்றான். இந்தியாவை ஒப்பிடும்போது வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க, குறைந்த தொகையை செலவழிக்க வேண்டி வரும். ஆனால், இந்தியாவில் மருத்துவம் படிப்புக்கு நன்கொடை மட்டுமே அதிகம் உண்டு. ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ சீட் பெறவே கோடிகளில் பணம் செலுத்த வேண்டி உள்ளது. நவீன் தனது பள்ளித் தேர்வில் 97 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர். 97% மதிப்பெண் பெற்றிருந்தாலும், என் மகனால் கர்நாடகாவில் மருத்துவ சீட் பெற முடியவில்லை. மருத்துவ சீட் பெற, கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற நிலையே உள்ளது” என்று தெரிவித்தார்.
அதேநேரம் நவீனின் தாய் விஜயலட்சுமி அமைச்சரின் கருத்துக்கு, “திறமையானவன் ஏழைக் குடும்பத்தில் பிறக்கக் கூடாது. நம் நாட்டில் திறமைக்கு மதிப்பில்லை…. இங்கே மருத்துவம் படிக்க, நன்கொடையாக மொத்தமாக கோடிக்கணக்கில் கேட்டார்கள். எங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் இல்லை. ஆனால், உக்ரைனில் சுமார் ரூ.50-60 லட்சம் மட்டுமே செலவாகும். அந்த நம்பிக்கையில், அவனை உக்ரைனுக்கு அனுப்பினோம். நவீனுக்குதிறமை இருக்கிறது, அதனால்தான் அவன் உக்ரைனுக்குச் சென்றான். இல்லையெனில், நாங்கள் ஏன் அவனை அங்கு அனுப்ப போகிறோம்?” என்று காட்டமாக பேசினார்.
நவீனின் உறவினர் ஒருவர் பேசுகையில், ” அவர்கள் குடும்பத்திற்கு நிதி நெருக்கடிகள் இருப்பதால், இந்தியாவை விட உக்ரைன் அவர்களுக்கு ஏதுவாக இருந்தது. “மேனேஜ்மென்ட் கோட்டாவில் சீட் வாங்க நாங்கள் விரும்பவில்லை. இதனால், நவீனை உக்ரைனுக்கு அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பணம் சேர்த்தோம். அவனின் மருத்துவர் கனவை நிறைவேற்ற அதுவே வழி என்று தோன்றியது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.