தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ந்தத் தொகையில் 84 சதவீதம் அதாவது 31 ஆயிரத்து 10 கோடி ரூபாய் அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு ஊதியமாக செல்கிறது. மிச்சமிருக்கக்கூடிய 16 சதவீதத்தில் சீருடை, புத்தகங்கள் மற்றும் பள்ளிகளுக்குக் கொடுக்கக்கூடிய தொகை என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
‘மக்களை ஏமாற்றிய திமுக பட்ஜெட்’ என்ற தலைப்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக பட்ஜெட்டை விமர்சித்துப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசுகையில்: “பள்ளிக்கல்வித் துறை என்பது மிகமிக முக்கியமானது. குறிப்பாக நமது குழந்தைகள் அங்கு சென்று படித்து, அடுத்தக்கட்ட தலைவர்களாக, அடுத்த சந்ததியினராக வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கியிருக்கக்கூடிய தொகை என்பது 36,895 கோடி ரூபாய். இதுகுறித்து நிதியமைச்சர் பேசும்போதும் கடந்த ஆண்டை விட 4 ஆயிரம் கோடி அதிகமாக ஒதுக்கி சாதனை செய்திருப்பதாக கூறியிருக்கின்றார்.
ஆனால் 36,000 கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கி இந்தத் தொகையில் 84 சதவீதம் அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு ஊதியமாக செல்கிறது. அதாவது 31 ஆயிரத்து 10 கோடி ரூபாய் ஆசிரியர்களுக்கு ஊதியமாகச் செல்கிறது. மிச்சமிருக்கக்கூடிய 16 சதவீதத்தில் சீருடை, புத்தகங்கள் மற்றும் பள்ளிகளுக்குக் கொடுக்கக்கூடிய தொகை.
தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கக்கூடிய பள்ளிகளின் நிலைமையைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அங்கு, மழை பெய்தால் உள்ளே உட்கார முடியாது, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கழிவறை வசதி இல்லாத பள்ளிக் கட்டிடங்கள் தான் தமிழகத்தில் இருக்கின்றன. ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. அண்மையில் கூட, நாகர்கோவில், மதுரையில் மழைக்காலத்தில் கட்டிடங்கள் இடிந்துவிழுந்த சம்பவங்கள் நடந்தன.
பள்ளிகளை தரம் உயர்த்துதல் போன்ற பணிகளுக்கு இல்லாமல் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க 84 சதவீதம் ஒதுக்குகிறார்கள். மீதமுள்ள 16 சதவீதம் இவர்கள் கமிஷன் அடிப்பதற்காக செலவு செய்திருக்கிறார்ள்.
இவை தவிர அரசுப் பள்ளி உண்மையாகவே முன்னேறி, நம்முடைய மக்கள் தனியார் பள்ளிக்குச் செல்லாமல், அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, அங்கு படித்து பெரிய ஆட்களாக வருவதற்காக இந்த பட்ஜெட்டில் எதுவுமே கிடையாது.
ஏனென்றால், தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கத்தான் இந்த அரசு இருக்கிறதே தவிர, அரசுப் பள்ளியை இழுத்துமூடும் அளவுக்குத்தான் இந்த அரசின் ஒவ்வொரு பட்ஜெட்டும் இருக்கிறது” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.