இணைய வரலாற்றில் பெரும் புரட்சியாக கருதப்படும் 5ஜி சேவையை கைபற்றுவதற்கான ஏலம் ஜூலை 26-ம் தேதி நடைபெறுகிறது. ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அம்பானியின் ஜியோ நிறுவனமும், மிட்டலின் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிடும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அதானியும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக பணக்காரர்களில் டாப் 10 இடங்களில் இருப்பவர்களில் இருவர் இந்தியர்கள். அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி ஆகிய இருவரும் ஆசிய அளவிலும் முன்னணி வகிக்கின்றனர். சொல்லப்போனால், ஆசிய கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பிடிப்பதில் இருவருக்கு இடையிலும் போட்டி நிலவுகிறது.
முதலிடத்திற்கு மோதல்
முகேஷ் அம்பானி இப்போது ஆசிய அளவில் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பிடித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் இந்த இடத்தை பிடித்திருந்தார் கவுதம் அதானி. இப்போது அவரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்
ப்ளூம்பெர்க் ரியல் டைம் பில்லியனர் பட்டியலில், 99.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பாக கொண்டுள்ளார் அம்பானி. 98.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தன் சொத்து மதிப்பாக கொண்டுள்ளார் அதானி.
இந்தபோட்டி ஒருபுறம் இருக்கையில் இருவருமே புதிய தொழில்களை தொடங்கி தங்கள் சாம்ராஜியத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஆவர்.
5ஜி ஏலம்
இந்தநிலையில் நாடுமுழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 5ஜி அலைக்கறைக்கான ஏலத்துக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஜூலை மாதம் இறுதியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வரும் 26-ம் தேதி ஏலம் நடைபெறுகிறது. இதில் 20 ஆண்டுகளுக்கு 73 ஜிகாஹெட்ஸ் அலைக்கறை ஏலம் விடப்படுகிறது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளன. இதில் ஜியோ முகேஷ் அம்பானியின் நிறுவனம். ஏர்டெல் மிட்டலின் நிறுவனமாகும்.
இதனிடையே நான்காவது விண்ணப்பதாரர் அதானி குழுமம் இந்த ஏலத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமம் அண்மையில் தேசிய நீண்ட தூரம் (NLD) மற்றும் சர்வதேச நீண்ட தூர (ILD) உரிமங்களைப் பெற்றுள்ளது. ஆனால் இதனை அதானி குழுமம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஏல காலக்கெடுவின்படி, விண்ணப்பதாரர்களின் உரிமை விவரங்கள் ஜூலை 12 -ம் தேதி வெளியிடப்படும். அதேசமயம் ஏலதாரர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஜூலை 26-ம் தேதி அன்று அதானி குழுமம் 5G ஏலத்தில் பங்கேற்றால், அது அம்பானியுடன் முதல் நேரடி போட்டியாக இருக்கும்.
அதானி அண்மையில் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் களமிறங்கியுள்ளார். இது முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி காலத்தில் இருந்தே அவர்கள் குடும்பம் கோலோச்சி வரும் துறை.
2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக இருக்கும் திட்டங்களை அதானி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சோலார் பேனல்கள், பேட்டரிகள், பச்சை ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான ஜிகா தொழிற்சாலைகள் உட்பட புதிய ஆற்றல் வணிகத்திற்கான பல பில்லியன் டாலர் திட்டங்களை அம்பானியும் அறிவித்துள்ளார். எனவே 5ஜி ஏலத்திலும் இருவரிடையே போட்டி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.