Site icon ழகரம்

உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய 1,416 மாணவர்களுக்கு மனநல ஆலோசனை…..!

உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு 104 கட்டணமில்லா அழைப்பு மையத்தின் மூலம் மனநல ஆலோசனை வழங்கும் நிகழ்வினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சென்னையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஆணையரகத்தை, சென்னை எழிலகத்தில் உருவாக்கி, அந்த அமைப்பின் மூலம் ஒரு 7 வாட்ஸ் ஆப் குழுக்களை ஏற்படுத்தி உக்ரைன் நாட்டில் பயிலும் தமிழக மாணவர்களை அழைத்து வருகிற பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் நேரடியாக எழிலகத்தில் செயல்படுகிற கண்காணிப்பு மையத்திற்கு சென்று உக்ரைன் நாட்டில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களிடையே காணொலி வாயிலாக பேசி அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார். புதுடெல்லியியில் இருக்கிற தமிழ்நாடு இல்லத்தில் அதுல்யா மிஸ்ரா, உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு வரும் தமிழக மாணவர்களை புதுடெல்லியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைப்பதும், சென்னையில் இருந்து மாணவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பது மாதிரியான பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் இதுவரை உக்ரைனிலிருந்து தமிழகத்திற்கு 1416 மாணவ, மாணவியர்கள் வந்து சேர்ந்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, அப்துல்லா, கலாநிதி வீராச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகிய நால்வரும் நான்கு இந்திய ஆட்சிப் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து உக்ரைன் நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் தமிழக மக்களை விரைந்து மீட்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் இந்த குழுவினர் புதுடெல்லியிலேயே தங்கி இருந்து வெளியுறவு அமைச்சகத்தோடும், உக்ரைனில் இருக்கிற தூதரக அலுவலகங்களோடும் தொடர்பு கொண்டு மாணவர்கள் மற்றும் தமிழக மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.

தமிழக முதல்வர், உக்ரைனில் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிற மாணவர்களின் எதிர்கால மருத்துவப் படிப்பை தொடர்வதற்கு மத்திய அரசு உதவிட வேண்டுமென்றும், இந்தியாவில் இருக்கிற மருத்துவக் கல்லூரிகளில் இவர்களை சேர்க்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

ஏனெனில் இவர்கள் மீண்டும் உக்ரைன் செல்ல முடியாத நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட வேண்டுமென்ற கோரிக்கை விடுத்திருக்கிறார். மத்திய அரசும், மாநில அரசும் மருத்துவக் கல்வி தொடர்ந்து படிப்பதற்கு உதவிட வேண்டுமென்று மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது.

அதோடு, உக்ரைனில் இருக்கிற பாடத்திட்டத்தைப் போலவே போலந்து போன்ற பல்வேறு சிறிய நாடுகளின் மருத்துவ பாடத்திட்டங்களும் இருக்கிறது. அங்கே எங்களை அனுப்பினாலும் பரவாயில்லை என்றும் மருத்துவப் படிப்பை தொடர வேண்டுமென்றும் கருத்துக்கள் வரப்பெற்றுள்ளது. எனவே, நிச்சயம் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

இந்த வகையில் அந்த மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக மன ஆலோசனை என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பாக 20 மனநல ஆலோசகர்கள் 1416 மாணவ, மாவணவியர்களை தொடர்பு கொண்டு மற்றும் அவர்களின் பொற்றோர்களிடமும் தொடர்பு கொண்டு அவர்களின் எதிர்கால கனவுகள் ஆக்கபூர்வமாய் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவார்கள். அதற்கான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

 

Exit mobile version