நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க-வினர் பலர், சென்னை ராயபுரம் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாகக் கூறி தி.மு.க பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர்.
கடந்த திங்களன்று கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினரால் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க-வினர் பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் ஒரு வழக்கில் காவல்துறையினர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த நிலையில், 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்ததாக ஜெயக்குமார் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொலை மிரட்டல், குற்றச்சதி, அத்துமீறி நுழைதல் மற்றும் குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் சந்தித்துப் பேசினர்.
சிறை வளாகத்தில் செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திமுகவினரை கையும் களவுமாக பிடித்ததால் உண்மைக்கு மாறாக அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு வகையில் ஆளும் அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அவர்களை காவல் துறையினர் திமுகவில் சேர வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜெயக்குமார் நலமாகவும், தெம்பாகவும் உள்ளார் எனவும், எதிர்கட்சியை அழித்து விட திமுக அரசு கங்கணம் கட்டி செயல்படுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.