ரஷ்ய நாட்டில் இருந்து பெட்ரோலியம், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய முழுமையாகத் தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்.
புதின் தலைமைக்கு அமெரிக்க மக்கள் அளிக்கும் இன்னொரு பெரிய அடி இது என்பது இதன் பொருள் என்று தெரிவித்துள்ளார் பைடன்.
“புதினுடைய போருக்கு மானியம் அளிப்பவர்களாக நாங்கள் இருக்கப்போவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய், எரிவாயு விலை அதிகரிக்கும் என்ற பெரிய அளவிலான அச்சம் இருந்தாலும், அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
பைடனின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து எண்ணெய் விலைகள் ஏற்கெனவே உயர்ந்துகொண்டுள்ளன.
ஐரோப்பாவைவிட விரைவாக இத்தகைய முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. காரணம், ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் ரஷ்ய எண்ணெய், எரிவாயுவை நம்பி இருப்பவை.