யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகள் ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
இதனிடையே யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று பிரிட்டன் கூறியுள்ளது.
படையெடுப்பை குறிக்கும் வகையிலேயே ரஷ்யா ஏற்கனவே பீரங்கிகள் மற்றும் படைகளை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளது என்றும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை பிரிட்டன் விதிக்கும் என்றும் அந்நாட்டு சுகாதாரத் துறை செயலர் சஜித் ஜாவித் கூறியுள்ளார்.
“யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என முடிவுக்கு வரலாம்” என ஸ்கை நியூஸிடம் அவர் கூறினார்.
யுக்ரேன் அமெரிக்காவின் காலனி
தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், யுக்ரேன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அது அமெரிக்காவின் காலனியாகவே இருந்து வந்திருக்கிறது என்று கூறினார்.
நேட்டோ அமைப்பில் யுக்ரேன் சேருவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் கூறினார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலையை நேட்டோ அமைப்பு புறக்கணிப்பதாக புதின் தனது உரையில் மீண்டும் குறிப்பிட்டார்.
யுக்ரேனிடம் இருந்து பிரிந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக புடின் அறிவித்தார்.
தொலைக்காட்சி உரை முடிந்த சிறிது நேரத்தில் இரு பிராந்தியங்களையும் அங்கீகரிப்பது தொடர்பான ஆவணங்களில் புதின் கையெழுத்திட்டார். அதில் ரஷ்யப் படைகள் அப்பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இதனால் அப்பிராந்தியம் முழுக்க போர் மேகம் சூழ்ந்திருக்கிறது.