யுக்ரேனிலிருந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதாக, ஐநா தெரிவித்துள்ளது.
யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை தொடங்கிய 7 நாட்களில் இத்தனை பேர் வெளியேறியுள்ளனர். அந்நாட்டின் மீது ரஷ்யாவின் படையெடுப்பு கடந்த வியாழக்கிழமை (பிப். 24) அன்று தொடங்கியது.
“2015 அகதி சிக்கலின்போது ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றோரின் எண்ணிக்கை 13 லட்சம். தற்போது கடந்த ஒரு வாரத்திலேயே யுக்ரேனிலிருந்து அகதிகளாக செல்வோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது” என, பிபிசியின் லூயிஸ் குடால் சுட்டிக்காட்டுகிறார்.
அகதிகளுக்கான ஐநாவின் உயர் ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி “துப்பாக்கிகள் மௌனமாக வேண்டும். இதனால், யுக்ரேனில் இன்னும் இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர்காக்கும் மனித நேய உதவிகளை வழங்க முடியும்” என, ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடியால், யுக்ரேனில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்வார்கள் என்றும், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படும் என்றும் இந்த ஆணையம் கணித்துள்ளது.