”காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக அரசு 2022-2023 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மேகேதாட்டுவில் அணைகட்ட ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நிதி நிலை அறிக்கையை முன்வைத்து சட்டப்பேரவையில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழக அரசு எதிர்த்தாலும் மத்திய அரசு ஒப்புதல் பெற்று அணைகட்டியே தீருவோம் என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநில நீர்ப்பாசனதுறை அமைச்சர் கோவிந்தகார்ஜோள், காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழக அரசு தடுத்தாலும் அணை கட்டப்படும் என்று ஆணவத்துடன் பேசியுள்ளார். மேகதாட்டு
அணை விவகாரத்தில் யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை. மத்திய அரசு உடனடியாக அத்திட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், பாஜக ஆட்சியாக இருந்தாலும், அவர்கள் காவிரி விவகாரத்தில் தமிழருக்கு எதிராக போக்கை கையாண்டு வருவதுதான் வரலாறு. அதனை, நமக்கு கடந்த கால கற்பிதங்கள் நிறைய உணர்த்தியுள்ளது.
குறிப்பாக, 1970-களில் அன்றைய மத்திய காங்கிரஸ் ஆட்சியின் மறைமுகத் துணையோடு கர்நாடகம் சட்டவிரோதமாக ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளைக் கட்டியது. அதனால், தமிழகத்திற்கு தேவையான நீரை பெற முடியவில்லை. இதன் காரணமாக, தமிழகம் பேரிழப்புகளை சந்தித்தது.
அதுமட்டுமின்றி, 1990-களில், கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். பல்வேறு இழப்புகளை சந்தித்த தமிழர்கள் அகதிகள் போன்று தமிழகத்தில் குடியேறினர். எப்போதுமே, தமிழர் விரோத போக்கை கையாள்வதே கர்நாடக அரசின் நிலைப்பாடு.
ஆனால், மேகேதாட்டு விவகாரத்தில் நடுநிலையாக நடந்துகொள்ள வேண்டிய மத்திய அரசும், தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது, மார்ச் 5ம் தேதி, பெங்களூருவில் பேசிய மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர், மேகதாட்டு அணை திட்டம் இந்தாண்டு தொடங்கும் என அறிவித்துள்ளார்.
சட்டவிரோத மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் துணை நிற்கும் மத்திய அரசு, கர்நாடக அரசை விட அத்திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை, தமிழர் விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
காவிரி நடுவர்மன்றமும், உச்ச நீதிமன்றமும் காவிரியின் குறுக்கே எந்தவொரு அணையும் கட்டப்படக்கூடாது. அவ்வாறு கட்டுவதாக இருந்தால் தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடக அரசு பெற வேண்டும் எனத் தெளிவாகக் கூறியுள்ளன.
காவிரி நடுவர்மன்றம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் அல்லது மதிக்காமல், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு துணை போவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்பதை தான் காட்டுகிறது.
தமிழகத்தில் பாஜக எப்போதுமே காலூன்ற முடியாது என்பதை நன்கு புரிந்துகொண்ட மோடி அரசு, எதிர்வரும் காலங்களில் கர்நாடகாவிலாவது பாஜக ஆட்சியை உறுத்திப்படுத்தி கொள்ளலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான், மேகேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டுகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது.
எனவே, காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உடனடியாகத் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், இங்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.