உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை ராஜ்புத்திரர்களை மொகலாயர் படுகொலையுடன் ஒப்பிட்ட பேசிய இந்தியாவுக்கான உக்ரைன் பொலிகாவை ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் நவீன் (21) உயிரிழந்தார்.
உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் செலகெரேவை சேர்ந்தவர். சேகரப்பா கவுடர் என்பவரின் மகனான இவர் அங்குள்ள கார்கிவ் தேசிய மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்துள்ளார்.
நேற்று காலையில் கார்கிவ் நகரில் உள்ள கடைக்கு உணவு வாங்க சென்ற அவர் வான்வெளி தாக்குதலில் சிக்கியுள்ளார். அவரது செல்போன் மூலம் நவீனின் இந்திய நண்பருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உயரிழந்த மாணவரின் தந்தை சேகரப்பா கவுடருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார்.
அப்போது மாணவரின் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். இந்திய அதிகாரிகள் ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த சம்பவத்துக்கு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா நேற்று கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை ராஜபுத்திரர்கள் மீது முகலாயர்கள் நடத்திய தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசினார். இந்தியாவுக்கானஉக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியதாவது:
இது ராஜபுத்திரர்களுக்கு எதிராக முகலாயர்கள் ஏற்பாடு செய்த படுகொலை போன்றது. நாதிர்ஷாவின் படையெடுப்பு போன்றது. குண்டுவீச்சு தாக்குதலை நிறுத்த புதினுக்கு எதிரான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துமாறு பிரதமர் மோடி உள்ளிட்ட செல்வாக்கு மிக்க அனைத்து உலகத் தலைவர்களையும் நாங்கள் ஒவ்வொரு முறையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இடைக்கால இந்திய வரலாற்றைப் பற்றிய தனது அரைகுறை அறிவை தன்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்பதற்கான துல்லியமற்ற முறையில் இதுபோன்ற பிரதிநிதித்துவப்படுத்தி பேசுவது இஸ்லாமோபோபியாவின் (இஸ்லாமிய வெறுப்பு) தாக்கத்தால் ஏற்படுத்துகிறது.
முகலாயர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த அவருக்கு எங்கிருந்து யோசனை வந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவா?
இவ்வாறு ஒவைசி கூறியுள்ளார்.