Site icon ழகரம்

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 வரை அதிகரிக்க வாய்ப்பு: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில், இந்த வாரத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை  13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 140 டாலராக அதிகரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். லிட்டருக்கு ரூ.15 வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.01 என்றளவில் குறைந்தது.

இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85% வரை இறக்குமதி மூலமே சமாளிக்கிறது. இதனால், ஆசிய நாடுகளிலேயே இந்தியா கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எண்ணெய் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், நவம்பர் 4, 2021 முதல் இந்தியாவில் எரிபொருள் விலையில் மாற்றமே இல்லை.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 அதிகரிக்கலாம் என்றாலும். அதனை ஒரே மூச்சில் செய்யாமல் படிப்படியாக தினமும் 50 காசுகள் என்றளவில் உயர்த்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version