
புதுச்சேரியில் 483 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருத்து முகாம் நடைபெறுகிறது. இந்தப் பணியை மாநில முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 5 வயதுக்குட்பட்ட 86,801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (பிப்.27) புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறவுள்ளது. மக்கள் அதிகம் கூடும் மற்றும் மக்கள் கடந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோயில், தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, சுண்ணாம்பாறு படகுக்குழாம், போகோ லேண்ட், போத்தீஸ் ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்பட இருக்கிறது.
புதுச்சேரி, தமிழக எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியக்கோவில், திருக்கனூர் மற்றும் குருமாம்பேட் ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் மற்றும் நடமாடும் போலியோ ஊர்தி மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து போடப்பட இருக்கிறது.
இந்தாண்டு அதிகம் இடம்பெயரும் மக்களை இனம்கண்டு அவர்களுக்கு முழுமையாக போலியோ சொட்டு மருந்து சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாமினை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி, ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 483 மையங்களில் 876 குழுக்களை கொண்டு ஐந்து வயதுக்கு உட்பட்ட 86,801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படவுள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறையின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் மக்களும், தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளித்து மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கதிர்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் நாளை நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைக்கவுள்ளார்.