Site icon ழகரம்

’புதினை படுகொலை செய்ய ரஷ்யாவில் ஒரு ப்ரூட்டஸ் இருக்கிறாரா?’ – அமெரிக்க எம்.பி. பேச்சால் சர்ச்சை

”உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி புதின் படுகொலை. அவரைப் படுகொலை செய்ய ரஷ்யாவில் ஒரு ப்ரூட்டஸ் இருக்க வேண்டும்” என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம்.

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி இன்றுடன் (மார்ச் 4) 9 நாட்கள் ஆகிவிட்டன. இரு நாடுகளும் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி கூடமான உக்ரைனின் ஜேப்போரிஜியா அணு உலையை ரஷ்யா தாக்கியது. தற்போது அந்தக் கூடத்தை முழுமையாக தன் வசம் கொண்டு வந்துவிட்டது.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர யோசனை தெரிவித்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்ஸே சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியில், “இது (ரஷ்ய படையெடுப்பு) எப்படி முடிவுக்கு வரும்? ரஷ்யாவில் உள்ள யாரேனும் ஒரு திட்டம் தீட்டி அந்த நபரின் (புதின்) கதையை முடிக்க வேண்டும்” என்றார்.

அத்துடன் நிறுத்தாமல், தனது ட்விட்டரில் அடுத்தடுத்து ட்வீட்களைப் பகிர்ந்தார். “இதை செய்துமுடிக்க ரஷ்ய மக்களால் மட்டுமே முடியும். ரஷ்யாவில் யாரேனும் ப்ரூட்டஸ் இருகிறீர்களா?” என்று வினவியிருந்தார்.

பேரரசர் ஜூலியஸ் சீஸரின் படுகொலையை அவரது கூட்டாளியான ப்ரூட்டஸ் செய்தார். இறக்கும் தருவாயில் ஜூலியஸ் சீஸர், ’யூ டூ ப்ரூட்டஸ்’ என்று வினவும் வசனம் உலகம் முழுவதும் பிரபலம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட லிண்ட்ஸே கிரஹாம் இன்னொரு கேள்வியையும் வினவியிருக்கிறார். ’’ரஷ்யாவில் அதிசக்தி வாய்ந்த கர்னல் ஸ்டாஃபென்பெர்க் யாரும் இருக்கிறீர்களா? நீங்கள் வெற்றிகரமாக ஒரு குண்டுபோட்டு புதினை அப்புறப்படுத்தலாமே’’ என்று வினவியதோடு, ’’அப்படிச் செய்தால் நீங்கள் உங்கள் நாட்டுக்கும், உலகுக்கும் பெரிய சேவை செய்ததாகக் கருதப்படுவீர்கள்’’ என்று கூறியுள்ளார்.

1944-ல் ஜெர்மனி சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் மீது கர்னல் ஸ்டாஃபென்பெர்க் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றவராவார்.

முன்னதாக, இவர் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதினின் போர்க்குற்றங்களைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version