பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, தீவிர வலதுசாரியான தற்போதைய அதிபர் ஜேர் பொல்சனாரோவை தோற்கடித்ததால் பிரேசில் இடதுசாரி பக்கமாகத் திரும்பியுள்ளது.
பிரேசிலின் அரசியல் களத்தில் எதிரெதிர் பக்கங்களில் நேருக்கு நேர் மோதிய இரண்டு போட்டியாளர்களின் வலது, இடது எனப் பிளவுபட்ட பிரசாரத்திற்குப் பிறகு, லூலா 50.9% வாக்குகளைப் பெற்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் சிறையில் இருந்தது, அதிபர் பதவிக்கு நிற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது போன்றவற்றுக்குப் பிறகு ஓர் அரசியல்வாதியாக லூலாவுக்கு இது பிரமிக்க வைக்கும் மறுபிரவேசம்.
பிரேசிலின் அரசாங்க எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராஸுடனான ஒப்பந்தங்களுக்கு ஈடாக பிரேசிலின் கட்டுமான நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
லூலா தனது தண்டனை ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக 580 நாட்கள் சிறையில் இருந்தார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கினார்.
அவருடைய வெற்றி உரையை, “என்னை உயிரோடு புதைக்க முயன்றார்கள். இதோ மீண்டு வந்துவிட்டேன்” என்று தொடங்கினார்.