வடசென்னை பகுதியில் கானா பாடல்கள் மூலம் கலக்கிக் கொண்டிருந்த பாலா, ‘கானா பாலா’என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வந்தார் . இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘பிறகு’ படத்தின் மூலம் திரையுலகில் கடந்த 2007-ம் ஆண்டில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்தோஷ் நாராயணன் இசையில் தொடர்ந்து பாடி வந்தார். தமிழ் திரையுலகில் முக்கியமான பிண்ணனி பாடகராக கானா பாலா உள்ளார்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் 72-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார் 51 வயதான கானா பாலா என்கிற பாலமுருகன்.முதல் சுற்றில் 3534 வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தார்.திமுக வேட்பாளரை விடவும் 468 வாக்குகள் அதிகம் பெற்று கானா பாலா முன்னிலை வகித்து வந்தார். அவர் வெற்றி பெறுவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். கடைசியில் 8303 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றார்.6095 வாக்குகள் பெற்று கானா பாலா இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
நான் பிறந்து வளர்ந்த இடத்தில் வசிக்கும் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவன் என்பதால் மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று கானா பாலா தெரிவித்தநிலையில், 2,208 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.