உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். அவரது பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார், துணை ராணுவப்படையினர் வந்திருந்தனர்.
வாக்களித்துவிட்டு வெளியில் வந்த அஜய் மிஸ்ராவிடம் கேள்விகள் எழுப்ப பத்திரிகையாளர்கள் குவிந்திருந்த நிலையில் எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளாமல் வெறும் வெற்றி அடையாளத்தை விரல்களில் காட்டிவிட்டுச் அவர் கிளம்பிச் சென்றார்.
ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறி விவசாயிகள் பத்திரிகையாளர் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் உ.பி.யில் பாஜக விவசாயிகள் ஆதரவை பெருமளவில் இழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதும் உ.பி. பஞ்சாப் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகளை ஆசுவாசப்படுத்தும் முயற்சி என்றே விமர்சிக்கப்பட்டது.
அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் லக்கிம்பூர் விவசாயிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.