Site icon ழகரம்

தீவிரவாத செயல்களுக்கு தமிழகத்தில் எந்த வடிவிலும் இடம் கிடையாது: கவர்னர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துவது போன்று மாயத்தோற்றத்தை உருவாக்குவது சரியல்ல என்றும், தீவிரவாத செயல்களுக்கு தமிழகத்தில் எந்த வடிவத்திலும் இடம் கிடையாது என்றும் கவர்னர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் கடந்த 23ம் தேதி நடந்த சம்பவம், நடந்து 4 நாட்களுக்கு பிறகுதான் தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட சில கருத்துக்களை தமிழக கவர்னர் தெரிவித்து உள்ளார். கோவை மாநகரத்துக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து உள்ளனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் கோவை மாநகர ஆணையரும் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, போலீஸ் டிஜிபி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார். சில மணி நேரங்களிலேயே விசாரணை துரிதமாக நடந்து உள்ளது. மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் அங்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அதே நேரத்தில் ஒன்றிய உளவுப்பிரிவு அதிகாரிகளும், மாநில உளவுப்பிரிவு அதிகாரிகளும் அங்கு வந்துள்ளனர். இந்த வெடிவிபத்தில் இறந்த ஜமேஷா முபின், உடனடியாக அடையாளம் காணப்பட்டு, அவரது வீட்டில் 24 மணி நேரத்துக்குள் சோதனையிடப்பட்டது.

அங்கு கிடைத்த பொருட்களின் அடிப்படையில் இது வெறும் சிலிண்டர் விபத்து அல்ல, இதன் பின்னால் பயங்கரவாத செயல்கள் இருக்கக் கூடும் என்பதை போலீஸ்துறை உணர்ந்து உடனடியாக விசாரணையை முடுக்கி விட்டது. ஜமேஷா முபினின் கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். 24ம் தேதி காலையில் தேசிய புலனாய்வு முகமை உயர் அதிகாரிகள், ஒன்றிய உளவுத்துறை அதிகாரிகள் மாநில போலீசாருடன் இணைந்து தடயங்களை ஆய்வு செய்தனர். தமிழக போலீசாருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதுபோன்ற பயங்கரவாத செயல்கள், குற்ற பின்னணிகள், ஆயுதங்கள் வைத்து இருத்தல் போன்ற சம்பவங்களில் ஒன்றிய உளவு அமைப்புகளுடன் இணைந்து செயல்படக்கூடிய நடைமுறையை போலீசார் பின்பற்றி வருகின்றனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட போது, தமிழக போலீசார் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு ஒத்துழைப்பு அளித்தார்கள் என்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளே பாராட்டி உள்ளனர். 25ம் தேதி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு, உபா சட்டப்பிரிவின் கீழ் மாற்றி பதியப்பட்டது. அன்று தேசிய புலனாய்வு முகமை உயர் அதிகாரிகள் புலன் விசாரணை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். 26ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தமிழக போலீசாருடன் இணைந்து பல இடங்களில் விசாரணை நடத்தி உள்ளனர். இது போன்ற ஒரு சம்பவம் நடக்கும்போது முதற்கட்ட விசாரணையை மாநில போலீசார் துவக்கினர்.

அதன் பிறகு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் அனைத்து விவரங்களும் தமிழக போலீசாரால், ஒன்றிய உளவுப்பிரிவுக்கும், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு கட்டத்திலும் தேசிய புலனாய்வு முகமைக்கும், ஒன்றிய உளவுப்பிரிவுக்கும் விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படாமல் இல்லை. மேலும் இந்த வழக்கில் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துவது போன்று ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவது சரியல்ல. முதல்வர் ஒவ்வொரு நாளும் நேரடி கண்காணிப்பில், ஒவ்வொருவரும் எந்த அளவில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.

தீபாவளி நாளில் மக்களிடம் பதற்றமான மனநிலை வந்து விடாமல், இயல்பான நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் வைக்கும் நடவடிக்கையில் முதல்வர் மேற்கொண்டார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் இயங்கக்கூடிய போலீஸ் துறை புலனாய்வை மேற்கொண்டு உள்ளது. பொதுவாக தேசிய புலனாய்வு முகமை வழக்கை குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகே வழக்கு பதிவு செய்து உள்ளது. தமிழகத்தில் எந்த காலக்கட்டத்திலும், எந்த சூழ்நிலையிலும் எந்தவொரு தீவிரவாத, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தமிழக முதல்வர் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார். இதில் அவர் எஃக்கை விட உறுதியாக உள்ளார். இதுபோன்று செயல்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழக மண்ணில் தீவிரவாத செயல்களுக்கு அனுமதி இல்லை. அதனை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விரட்டியடிக்கும் உறுதிபடைத்த முதல்வராக உள்ளார், என்றார்.

* ஜமேஷா முபினை என்ஐஏ விடுவித்தது ஏன்?
கோவை விபத்தில் இறந்த ஜமேஷா முபினை, 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து உள்ளனர். அதன்பிறகு விடுவித்து உள்ளனர். அவர்கள் ஏன் விடுவித்தார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Exit mobile version