சேலம் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் எம்ஏ வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில், ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வினாத்தாளை வடிவமைத்தது யார் என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்த விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப் பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கேள்வி இடம் பெற்றது குறித்து உயர் கல்வி துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.