செய்திகள்உலகம்

சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக புகார் மனு

போர் தீவிரமடைந்துள்ள சூழலில் பெலாரஸின் கோமெல் நகரில் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனிடையே, சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன்  அரசு புகார் மனு அளித்துள்ளது.

கடந்த 24-ம் தேதி உக்ரைன்  மீது ரஷ்யா போர் தொடுத்தது. தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.

ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன்  தரப்பு மறுத்துவிட்டது. தற்போது அவர்களே பெலாரஸின் கோமெல் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். இதை ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளது.

கோமெல் நகரில் உக்ரைன்  தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய குழு தயாராக உள்ளது.

இந்தக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் புதினின் பிரதிநிதி விளாடிமிர் மெடின்கி தலைமை ஏற்றுள்ளார். கடந்தமுறை பேச்சுவார்த்தைக்காக போரை தற்காலிகமாக நிறுத்தினோம். இந்த முறை போரை நிறுத்த மாட்டோம். தொடர்ந்து போர் நடைபெறும். பேச்சுவார்த்தைக்கு உக்ரைன்  தயாராக இல்லை என்றால் அதற்கான விளைவுகளை அந்த நாடு சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டிருப்பதாக உக்ரைன்  அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. எனினும் எந்த இடத்தில், எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.

இதனிடையே ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், போலந்து உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றன. அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

இதைத் தொடர்ந்து போலந்து, செக் குடியரசு, பல்கேரியா, ருமேனியா, ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டன், ஆஸ்திரியா, சுவீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள்  ரஷ்ய விமானங்கள் தங்களது வான்பரப்பில் பறக்க தடை  விதித்துள்ளன.

போலந்து தூதர் ஆடம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள் விசா இன்றி போலந்து நாட்டுக்கு வரலாம். எல்லை கடந்து வரும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை போலந்தில் உள்ள இந்திய தூதரகம் வழங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button