Site icon ழகரம்

கோபி நகராட்சித் தலைவர் பதவியை மறுத்த காங்கிரஸ்:போட்டியின்றி தேர்வான திமுக கவுன்சிலர்

திமுக கூட்டணியில் கோபி நகராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியினர் துணைத்தலைவர் பதவியே போதும் என ஒதுங்கிக் கொண்டனர். இதனால், கோபி நகராட்சித் தலைவராக திமுக கவுன்சிலர் நாகராஜ் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில், 14 வார்டுகளில் திமுகவும், இரண்டு வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக 13 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். கூட்டணி அடிப்படையில் பார்த்தால் திமுக – காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பெரும்பான்மை பெற்று நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது.

இதனிடையே கோபி நகராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக திமுக தலைமை நேற்று அறிவித்தது. ஆனால், நேற்று இரவு வரை நகராட்சித் தலைவருக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. கோபி நகராட்சியில் காங்கிரஸ் சார்பில் வேலுமணி, தீபா என்ற இரு பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற நிலையில் இவர்களில் ஒருவர் தலைவர் பதவிக்கு வேட்பாளராக முன் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் தங்களுக்கு கோபி நகராட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்றும், துணைத்தலைவர் பதவியே போதும் என காங்கிரஸ் ஒதுங்கியது.

இதுகுறித்து கோபி நகராட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் நிர்வாகியுமான நல்லசாமியிடம் கேட்டபோது, ”கோபி நகராட்சியில் துணைத்தலைவர் பதவியைத்தான் காங்கிரஸ் கட்சி கோரியிருந்தது. தவறுதலாக தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் திமுகவிற்கே தலைவர் பதவியை கொடுத்து விட்டோம்” என்றார்.

தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி மறுத்த நிலையில் திமுக நகரசெயலாளரும், கவுன்சிலருமான என்.ஆர். நாகராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக யாரும் போட்டியிடாத நிலையில், கோபி நகராட்சித் தலைவராக என்.ஆர்.நாகராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Exit mobile version