Site icon ழகரம்

கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கடனுதவி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5,33,357 உறுப்பினர்களுக்கு, ரூ.4,054.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, நகைக் கடன் தள்ளுபடியில் ரூ.4,900 கோடி வரை கொடுத்துவிட்டோம். மீதமுள்ள ரூ.100 கோடிக்கான தள்ளுபடிக்கு, மனுக்களைப் பரிசீலித்து, பயனாளிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்படுகிறது. விரைவாக அவர்களுக்குத் தள்ளுபடி வழங்கப்படும்.

தமிழகத்தில் 1,17,617 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2,756 கோடி தள்ளுபடி வழங்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 10-க்குள் கடன் தள்ளுபடி ரசீது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,88,309 உறுப்பினர்கள் பயனடைவர்.

Exit mobile version