Site icon ழகரம்

குண்டு வீசுவதை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள்: ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்

உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

 பேட்டியின்போது அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி, “உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும். நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்துமே ரஷ்ய விமானப்படை தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். இது ஒரு தடுப்பு நடவடிக்கை தான். இதன்மூலம் நாங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உறுப்பு நாடுகளை இழுத்துவிடுவதாக நினைக்க வேண்டாம்.

உக்ரைனிலிருந்து பத்திரமாக வெளியேற நிறைய அழைப்புகள் வந்தன. நான் எதையும் ஏற்கவில்லை. எங்கேயும் போகப்போவதும் இல்லை. நேட்டோ ஒருவேளை எங்களின் உறுப்பினர் கோரிக்கையை ஏற்காவிட்டாலும், சட்டத்திற்கு உட்பட்டு அளிக்கக் கூடிய பாதுகாப்பு உத்தரவாதத்தையாவது நல்குமாறு நேட்டோவுடன் வேண்டுவோம்” என்றார்.

உக்ரைன் அதிபரின் பேட்டி சென்றுகொண்டிருந்தபோதே, ரஷ்ய ஏவுகணை ஒன்று அரசு செய்தி சேனல் கோபுரம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கியிடம் அவசர செய்தி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், “நேட்டோ எங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், எங்களின் பிராந்திய ஒருமைப்பாட்டை நாங்கள் பேண, எங்கள் எல்லைகளைப் பாதுகாக்க, அண்டை நாடுகளுடன் நாங்கள் கொண்டிருக்கும் உறவைப் பேண, நாங்கள் முழுமையாக பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்வதற்கான உதவிகளை சட்டத்துக்கு உட்பட்டு செய்ய வேண்டும்.

உக்ரைன் தோல்வியடைந்துவிட்டால் ரஷ்யப் படைகள் நேட்டோ நாடுகளின் எல்லைகளில் வந்து நிற்கும். நாளை இதே நிலைமை நேட்டோ நாடுகளுக்கும் ஏற்படலாம். இங்கே ஒவ்வொரு நாளும் போர் நடக்கிறது. அன்றாடம் உதவிகளும் தேவைப்படுகின்றன. உலக நாடுகள் உதவிகளைத் துரிதப்படுத்த வேண்டும்” என்றார்.

Exit mobile version