Site icon ழகரம்

‘‘கீவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்’’- இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைனின் கீவ் நகரில் தங்கியுள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. உக்ரைனின் வடகிழக்கில் அமைந்துள்ள கார்கீவ் நகரத்தை ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீச்சி தாக்கி வருகிறது. இதனால் கார்கீவ் நிலைமை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

கார்கீவ் மட்டுமின்றி கீவ் நகரையும் கடுமையாக தாக்கி அழிக்க ரஷ்ய படைகள் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக விமானப்படை குண்டு வீச்சு தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தநிலையில் உக்ரைனின் கீவ் நகரில் தங்கியுள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

‘‘கீவ் நகரில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக கீவ் நகரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கிடைக்கக்கூடிய ரயில்கள் அல்லது கிடைக்கக்கூடிய வேறு வழிகள் மூலம் வேகமாக அந்த நகரை விட்டு வெளியேறி விடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.’’ என்று பதிவில் கூறியுள்ளது.

 

Exit mobile version