Site icon ழகரம்

காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிலையில், 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக தகவல் வெளியாகி, அதனடிப்படையில் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தலைமையிலான அதிமுகவினர் அங்கிருந்த திமுக பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்தச் சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் பிப். 21-ஆம் தேதி கைதான ஜெயக்குமாரை மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, ஜெயக்குமார் மீதான வழக்கில் கொலை முயற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ஜெயக்குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு தங்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறை தரப்பிற்கு மனுவின் நகலை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அந்த மனு குறித்து விளக்கம் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்

Exit mobile version