செய்திகள்இந்தியா

கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 41,800 கோடி டாலர்: மத்திய அரசு தகவல்

கடந்த நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் ஏற்றுமதி 41,800 கோடி டாலரை (ரூ.31.76 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இது முந்தைய நிதி ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாகும். கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய ஆண்டில் நடைபெற்ற ஏற்றுமதியைவிட 33 சதவீதம் அதிகம் என்று குறிப்பிட்டார்.

இன்ஜினீயரிங் பொருள் ஏற்றுமதி 11,100 கோடி டாலரை தொட் டுள்ளது. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் 1,600 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முன்பெல்லாம் ஆசியபிராந்திய நாடுகளுக்கு மட்டுமேஅதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த நிதிஆண்டில் வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, நெதர்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

2022 மார்ச் மாதத்தில் மிக அதிக அளவாக 4,000 கோடி டாலருக்கு பொருட்கள் ஏற்றுமதியாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வேளாண் பொருள் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கோயல், 2019-20-ம் நிதி ஆண்டில் 2 லட்சம் டன்னாக இருந்த கோதுமை ஏற்றுமதி 2020-21-ம் நிதி ஆண்டில் 21.55 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் 70 லட்சத்தை எட்டியதாக அவர் கூறினார்.

சணல் சார்ந்த பொருள் ஏற்றுமதி, ஜவுளி, தோல் சார்ந்த பொருள், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் ஏற்றுமதி அதிகரிப்பதோடு வேலை வாய்ப்பும் பெருகும் என்று குறிப்பிட்டார்.

கரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று காலத்திலும் நமதுஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. உறுதியான, தீர்மானமான முடிவெடுக்கக் கூடிய பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்களின் தலைமையிலான அரசின் உதவியோடு இவையெல்லாம் சாத்தியமாகும். அரசு முழு மூச்சுடன்செயல்படும்போது நிர்ணயிக்கப்படும் இலக்குகளை எட்டுவது எளிதாகிறது என்று பியூஷ் கோயல் கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. இதனால் இந்த ஆண்டு கோதுமை ஏற்றுமதி 100 லட்சம் டன்னை எளிதாக எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வங்கதேசத்துக்கு சாலைமார்க்கமாக 35 லட்சம் டன்கோதுமை அனுப்பப்பட்டதாகவர்த்தக செயலர் பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button