ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி உறுதியாகியுள்ளது. டெல்லியைத் தாண்டி தற்போது பஞ்சாப் மாநிலத்தையும் ஆம் ஆத்மி தனது வசமாக்கி தனது கட்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தேசிய அரசியல் தலைவர்களின் பார்வையை தன் கட்சி மீது ஈர்த்துள்ளது.
முன்னிலை நிலவரம் உ.பி: காலை 10 மணிக்கு முன்னதாகவே உ.பி.யில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் சுட்டிக்காட்டியபடியே உ.பி.யில் பாஜக வாகை சூடக் காத்திருக்கிறது. 403 தொகுதிகளில் பாஜக 225, சமாஜ்வாதி 92, பகுஜன் சமாஜ் 7, காங்கிரஸ் 5 என முன்னிலை நிலவரம் இருக்கின்றது.
பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு க்ளீன் ஸ்வீப் என்று கூறியபடியே நிலைமை அக்கட்சிக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது. இப்போதைக்கு ஆம் ஆத்மி 81, காங் 16, அகாலி தளம் 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பாஜக வெறும் 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
கோவா: கோவாவில் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகள் பாஜகவுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கின்றன. தொங்கு சட்டசபை என்று கருத்துக்கணிப்புகள் கைகாட்டியுள்ள நிலையில், அதற்கு வாய்ப்பிலை என்று அடித்துச் சொல்லி பாஜக முன்னிலை வகிக்கிறது. அண்மை நிலவரப்படி கோவாவில் பாஜக 21, காங்கிரஸ் 8, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தலா 2 என்றளவில் உள்ளது. 40 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட கோவாவில் 21 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி பெரும்பான்மை பெற்றுவிடும்.
உத்தராகண்ட்: உத்தராகண்டில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட நிலையில் ஆரம்பநிலை வாக்கு நிலவரம் காங்கிரஸுக்கு சற்றே சாதகமாக சென்றிருந்தாலும்கூட தற்போது அங்கு பாஜக நிலவரம் சூடு பிடித்துள்ளது. அண்மை நிலவரப்படி பாஜக 41, காங்கிரஸ் 19, பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி தலா 1 என்ற நிலையில் உள்ளன.
மணிப்பூர்: 60 சட்டப்பேரவைகளைக் கொண்ட மணிப்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று பாஜக ஆட்சி அமைந்தது. இம்முறையும் பாஜகவே ஆட்சியமைக்கும் என பெரும்பான்மையான முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆரம்பநிலை வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக 23, காங்கிரஸ் 11, ஐக்கிய ஜனதா தளம் 5, பிற கட்சிகள் 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.