சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.
முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள் கிழமை வரை சிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், பின்னர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
ஆசிரியர், மல்யுத்த வீரர், முதல்வர்.. முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். மத்தியில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். அடிப்படையில் முலாயம் சிங் யாதவ் ஓர் ஆசிரியர். மல்யுத்த வீரரும் கூட. படிப்படியாக அரசியலில் இடம்பெற்ற அவர் உ.பி. அரசியலின் முக்கியமான முகமாக உருவெடுத்தார். பாஜகவை ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக எதிர்த்து வந்தவர் முலாயம் சிங் யாதவ்.
2012-ல் உ.பி.யில் சமாஜ்வாதி பெருவாரியான வெற்றி பெற்றது. அப்போது அவர் தனது மகன் அகிலேஷ் யாதவை, முதல்வராக பதவியில் உட்கார வைத்து வாரிசு அரசியல் சர்ச்சையில் இணைந்தார். ஒருபுறம்உட்கட்சி பூசல், மகன் உயர்த்திய போர்க்கொடி என பல்வேறு நெருக்கடிகள் இன்னொருபுறம் வயது முதிர்வு என முடங்கிய முலாயம் சிங் யாதவ் கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த முலாயம் சிங் தாமாகவே அரசியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார். இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில் மைன்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு,க,ஸ்டாலின்,பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவரது மகன் அகிலேஷ் யாதவ் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.