உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க சுமி நகரில் சில மணிநேரம் தாக்குதலை நிறுத்தி வைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வரும் சூழலில் உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் பேசவுள்ளார்
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் இறந்துள்ளனர். எனினும், உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், 11-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம், 2,135 இந்தியர்கள், யுக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து நேற்று அழைத்து வரப்பட்டனர்.
இத்துடன், 15,900 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதுவரை மொத்தம் 66 சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 13,852-ஐ எட்டியுள்ளது. விமானப்படையின் ஜம்போ விமானங்கள், 10 முறை சென்று 2056 பேரை அழைத்து வந்துள்ளது. இந்த பயணத்தில், 26 டன் நிவாரணப் பொருட்களையும் இந்தியா கொண்டு சென்றது.
இந்த சிறப்பு விமானங்களில் நேற்று 9 புதுடெல்லியிலும், 2 மும்பையிலும் தரையிறங்கியது. புடாபெஸ்ட் நகரத்திலிருந்து 6 விமானங்களும், புகாரெஸ்ட் நகரிலிருந்து 2 விமானங்களும், ரெசஸ்சோ நகரில் இருந்து 2 விமானங்களும், கோசிஸ் நகரில் இருந்து ஒரு விமானமும் வந்தன.
கார்கிவ் மற்றும் சுமியைத் தவிர, உக்ரைனின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் கீவ், கார்கிவ் நகரில் இருந்து ஏராளமான மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமி நகரில் தற்போது சண்டை அதிகரித்துள்ளது. அங்குள்ள மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் கடுங்குளிர், உணவு தட்டுப்பாடு, தண்ணீர் வசதியின்றி தவித்து வரும் நிலை உருவாகியுள்ளது. சுமி நகரில் இருந்து மூன்று மணி நேரம் பயணத் தூரத்தில் உள்ள போல்டாவாவில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டு வருகிறது.
சுமி நகரில் உள்ள இந்தியர்களை போல்டாவுக்கு வரவழைத்து அங்கிருந்து எளிதாக இந்தியாவுக்கு அழைத்து வந்து விட முடியும்.
அதேசமயம் அங்கு தீவிர தாக்குதல் நடப்பதால் இந்தியர்கள் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக ஆபரேஷன் கங்கா திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளையும் அணுகியுள்ளது.
சுமி நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேறி பாதுகாப்புடன் போல்டாவை அடைய ஏற்கெனவே உக்ரைனை இந்தியா அணுகியுள்ளது. இதற்காக தற்காலிகமாக போர்நிறுத்தத்தை மேற்கொள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசவுள்ளார் அப்போது சுமி நகரில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்கவும், அதற்காக தாக்குதலை சற்று நேரம் நிறுத்தவும் கேட்டுக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.