நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதலை ரஷ்ய படைகள் மேற்கொண்டு வருகிறது. ஆறாவது நாளான இன்றும், தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியான கட்டுரையில், ‘வாக்னர் என்ற குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பின் 400 பேர் சமீபத்தில் ரஷ்யாவுக்கு வந்தனர். இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வாக்னர் குழுமத்தில் 2,000 முதல் 4,000 பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நடத்தப்படுகிறது. மேற்கண்ட கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்தனர். இவர்கள் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் உக்ரைன் அதிபர் மட்டுமின்றி அவரது அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்ல இந்த கூலிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு இந்த கூலிப்படையினர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கியை கொல்ல திட்டமிட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.